Last Updated : 13 Jul, 2025 02:16 PM

6  

Published : 13 Jul 2025 02:16 PM
Last Updated : 13 Jul 2025 02:16 PM

‘மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது’ - மு.க.ஸ்டாலின்

சென்னை: “மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது, அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும்,” என மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக நிர்வாகிகளை நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின். அந்த வகையில், இன்றைய 'உடன்பிறப்பே வா' கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் இடையே ஸ்டாலின் பேசுகையில் “மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது, அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும்,” என அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து திமுக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பொதுமக்களுக்கான அரசாகத் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வரும் நிலையில், இப்படியொரு அரசு அமைந்திடவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பத்தாண்டுகளாகப் பாடுபட்ட கழகத் தொண்டர்களின் அளப்பரிய உழைப்பே, உங்களில் ஒருவனான நான், முதல்வர் பொறுப்பை ஏற்பதற்கு அடிப்படையாக அமைந்தது என்பதை ஒருபோதும் மறந்ததில்லை.

மக்களின் கோரிக்கைகளைக் கேட்பது போல, கழகத்தினரின் மனக்குரலை அறிந்துகொள்வதற்காகத்தான் அறிவாலயத்தில், ‘உடன்பிறப்பே வா’ எனும் தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைப்பெற்று வருகிறது. ‘உடன்பிறப்பே வா’ எனும் கழக நிர்வாகிகளின் மனம் திறந்த சந்திப்பின் அனுபவம் எப்படி இருந்தது என்பதை அதில் பங்கேற்ற ஒவ்வொரு தொகுதியின் நகர - ஒன்றிய - பகுதி - பேரூர் நிர்வாகிகள் நன்கு அறிவார்கள்.

மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026-ஆம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர்ந்திட ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான பிரச்சாரப் பயணத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுக்கப்படுகிறது.

‘ஓரணியில் தமிழ்நாடு’செயலி 234 தொகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெற்றுள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள், 234 தொகுதிகளிலும் உள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள கழகத்தின் இளம் நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்து, மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் நிர்வாகிகள் வழிகாட்டுதலுடன் அவரவர் வாக்குச்சாவடிக்குப்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, மக்களை நேரில் சந்தித்து, திராவிட மாடல் அரசின் திட்டங்களால் அந்தக் குடும்பம் பெற்றுள்ள பயன்களை உறுதி செய்து, ஓரணியில் தமிழ்நாட்டைக் கட்டமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாதை தெளிவானது. பயணம் உறுதிமிக்கது. இடையூறுகள் - அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது என முதல்வர் குறிப்பிட்டு அனைத்து உடன்பிறப்புகளையும் ஒன்றிணைத்து பெருமைமிக்க கழகத்தின் உடன்பிறப்பே உன்னால் உருவாகும் “ஓரணியில் தமிழ்நாடு”என்று பெருமையோடு குறிப்பிட்டுள்ளார். இதில், இதுவரை 77,34,937 பேர் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளார்கள்.

மேலும், முதல்வர் மு.கஸ்டாலின் உடன்பிறப்பே வா! எனும் தலைப்பில் தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி, அவர்களுக்கு உற்சாகமூட்டி, புத்தகங்கள் வழங்கி கலந்துரையாடி தொகுதி நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து வருகிறார். அதில், தலைவருடனான பல பழைய பசுமையான நினைவுகளை நிருவாகிகள் நினைவுப்படுத்தி மகிழ்ந்தார்கள்.

முத்ல்வர், கழக நிர்வாகிகளிடம் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் கழக ஆட்சியின் மீது ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஆதரவு எப்படி உள்ளது. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் எனக் கேட்டறிந்தார். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் அதில் தாமாகவே முன்வந்து இணைத்து கொள்ளும் அளவிற்கு தாங்கள் பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கி வருகிறார்.

மேலும், மாணவ- மாணவிகள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களையும், சாதனைகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லி திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை விளக்க வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் சிறப்பாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் குறிப்பாகப் பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற மக்களின் பேராதரவு பெற்ற திட்டங்களையும், அதன் பலன்களையும் எடுத்துரைக்க வேண்டும் என்றும், இதில் எந்தவித சுணக்கமுமின்றி விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடியபோது, முதலில் அவர்களின் சொந்த தொழில், விவசாயப் பணிகள், குடும்ப நிலவரங்கள், அவர்களது வேலைகள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கியது என்பது, நிர்வாகிகளுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மேலும், அவர்கள் பகுதிகளில் உள்ள பொதுநல கோரிக்கைகளான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்து, உடனடியாக சம்மந்தப்பட்ட அமைச்சர்களை நிர்வாகிகளின் முன்னிலையிலேயே தொடர்புகொண்டு பல கோரிக்கைகளை நிறைவேற்றியதற்கு நிர்வாகிகள் தங்களது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.

மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது. அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும். உழைக்க வேண்டும். அதிகமாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். வளர்ச்சி என்பது என்னால் மட்டும் ஆனதல்ல; உங்கள் ஒவ்வொருவரின் ஆக்கபூர்வமான நடவடிக்கையால் வளர்ந்து வரும். இந்த வெற்றியை பெற்றுத்தர நீங்கள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x