Published : 13 Jul 2025 12:22 PM
Last Updated : 13 Jul 2025 12:22 PM

சென்னை மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், ஆட்டோவில் பயணிக்க ஒரே பயணச்சீட்டு - விரைவில் செயலி அறிமுகம்

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் (கும்டா)

சென்னையின் முக்கிய போக்குவரத்து வாகனங்களில் ஒரே பயணச் சீட்டில் பயணம் செய்வதற்கான செயலியை, விரைவில் அறிமுகம் செய்வதற்கு சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் ஒரே பயணச் சீட்டு மூலம் அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் பயணிப்பதற்கான ஏற்பாட்டை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் (கும்டா) மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மாநகர பேருந்து, மெட்ரோ ரயிலில் பயணிக்கும் வகையில் ஒரே பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக செயலியும் வடிவமைக்கப்பட்டு, ‘அண்ணா செயலி’ என தற்காலிகமாக பெயரிடப் பட்டுள்ளது.

இந்த செயலியில் புறப்படும் இடம், சேரும் இடம், பயணிக்கும் வாகனம் போன்றவற்றை பதிவு செய்தால், குறைந்த செலவில் விரைவாக பயணிக்கும் வழிமுறைகளை காட்டும். அந்த வழிகாட்டியை பயன்படுத்தும் வகையில் கட்டணம் செலுத்தினால், க்யூ ஆர் குறியீடு வடிவில் பயணச் சீட்டு உருவாகும். தற்போது, சுமார் 50-க்கும் மேற்பட்ட துறை சார் அதிகாரிகளால், சோதனை அடிப்படையில் அண்ணா செயலி பயன்படுத்தப் பட்டு வருகிறது.

இது தொடர்பாக, கும்டா சிறப்பு அதிகாரி ஐ.ஜெயக்குமார் கூறும்போது, "முதல்கட்டமாக மாநகர பேருந்து, சென்னை மெட்ரோ ரயில், ஆட்டோ ஆகியவற்றில் பயணிப்பதற்கு வழிகாட்டும் வகையில் செயலி வடிவமைக்கப் பட்டுள்ளது. நடப்பு மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் முதல்வர் செயலியை அறிமுகம் செய்யவிருக்கிறார். இதைத் தொடர்ந்து, மின்சார ரயில்களிலும் பயணிக்கும் வகையில் செயலியில் மாற்றம் செய்யப்படும். மேலும், பல்வேறு நவீன வசதிகளை செயலியில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x