Last Updated : 13 Jul, 2025 12:05 PM

6  

Published : 13 Jul 2025 12:05 PM
Last Updated : 13 Jul 2025 12:05 PM

‘சாரி மா மாடல் சர்க்கார்’ - அஜித்குமாருக்கு நீதி கேட்கும் போராட்டத்தில் திமுக மீது விஜய் விமர்சனம்

சென்னை: “திமுக ஆட்சியில் 24 பேர் போலீஸ் காவலில் உயிரிழந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரின் குடும்பத்தாரிடமும் ‘சாரி’ சொல்லுங்கள். அவர்கள் அனைவரின் குடும்பத்துக்கும் நிதியுதவி வழங்குங்கள். அண்ணா பல்கலை மாணவி வழக்கு முதல் அஜித்குமார் வழக்கு வரை எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கிறது. நீதிமன்றம்தான் கேள்விகேட்க வேண்டும் என்றால், நீங்க எதுக்கு சார்?” என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸார் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயிரிழந்த அஜித்குமாரின் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரடியாக சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதி உதவி வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் திருப்புவனம் காவல் நிலைய லாக்அப் மரணத்தை கண்டித்தும், கொலைக்கு நீதி வேண்டியும் இன்று சென்னையில் அவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கடந்த 4 ஆண்டுகளில் லாக்அப் மரணங்களில் தங்கள் உறவுகளை இழந்தவர்களின் குடும்பத்தினரும் மேடையேற்றப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டாத்தில் விஜய் பேசியது: “திருப்புவனம் மடப்புரம் அஜித்குமார் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்தக் குடும்பத்துக்கு நடந்த கொடுமைக்கு முதல்வர் ஸ்டாலின் சாரி சொன்னார். நல்ல விஷயம்தான். ஆனால், உங்களின் ஆட்சியில் 24 பேர் காவல் நிலையங்களில் இறந்திருக்கின்றனர். அவர்களிடமும் சாரி சொல்லுங்கள். அவர்களுக்கும் நிதியுதவி வழங்குங்கள்.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை சிபிஐக்கு மாற்றிபோது விமர்சித்தீர்களே. இது தமிழகத்துக்கு அவமானம் என்று சொன்னீர்கள். இப்போது ஏன் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினீர்கள். இப்போதும் சிபிஐ ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் கைப்பாவையாகத்தானே இருக்கிறது?

நாங்கள் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை கேட்டதால், பயந்து போய் சிபிஐக்கு மாற்றியிருக்கிறீர்கள். ஏன் ஒன்றிய அரசின் பின்னால் ஒளிந்து கொள்கிறீர்கள்?

இன்னும் உங்கள் ஆட்சியில் எத்தனை அடாவடிகள். அண்ணா பல்கலை. மாணவி வழக்கு முதல் அஜித்குமார் வழக்கு வரை எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கிறது. நீதிமன்றம்தான் கேள்வி கேட்க வேண்டும் என்றால், நீங்க எதுக்கு சார்? உங்க ஆட்சி எதுக்கு சார்? முதல்வர் பதவி எதுக்குங்க சார்? அதிகபட்சம் உங்ககிட்ட வர்ற பதில், 'சாரி மா, நடக்கக் கூடாதது நடந்துடுச்சு மா' என்பதுதானே.. இந்த வெற்று விளம்பர மாடல் திமுக சர்க்கார், இப்போ சாரி மா மாடல் சர்க்காரா மாறிடுச்சு.

இந்த இன்னபிலிட்டி அரசாங்கம் ஆட்சியை விட்டு செல்வதற்கு முன்பு, நீங்க செய்த எல்லா தவறுகளுக்கும் பரிகாரமா சட்டம் - ஒழுங்கை நீங்களே சரிசெஞ்சாகணும். இல்லன்னா, மக்களோடு மக்களா நின்று உங்களை சரி செய்ய வைப்போம். தவெக சார்பில் அதற்கு உண்டான போராட்டங்கள் நடத்தப்படும்” என்று காட்டமாக பேசினார் விஜய்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x