Published : 13 Jul 2025 12:53 AM
Last Updated : 13 Jul 2025 12:53 AM
சென்னை: ‘திமுக கூட்டணி சுக்கு நூறாக உடைய போகிறது’ என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப் வளாகத்தில் 16-வது ‘ரோஜ்கர் மேளா’ மூலம் மத்திய அரசு பணிகளுக்கான நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரயில்வே, நிதி, அஞ்சல் மற்றும் வருவாய்த் துறைகளில் பணியாற்ற 249 நபர்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒரே ஆண்டில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக, வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை பிரதமர் மோடி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
அதிமுக - பாஜக கூட்டணி மற்றும் ஆட்சி பொறுப்பு குறித்து அமித் ஷா என்ன சொல்கிறாரோ அதுதான் முடிவு. அவர் எங்கள் தேசிய தலைவர். அவர் சொல்வதே வேதவாக்கு. திருமாவளவன் தினமும் அரசை விமர்சனம் செய்கிறார். அவர் கூட்டணியை விட்டு எப்போது வெளியேறலாம் என்ற சூழலில் இருக்கிறார். வைகோவும் கூட்டணியில் இருந்து வெளியேறக் கூடிய நிலையில் இருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியேறும் சூழலில் உள்ளன. எனவே, திமுக கூட்டணியே சுக்கு நூறாக உடையப் போகிறது. அதே நேரம் எங்கள் கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது.
இறை நம்பிக்கை இல்லாத அரசு, கோயில்களை விட்டு வெளியே வர வேண்டும். கோயில் நிதி அறம் சார்ந்து பயன்படுத்தப்பட வேண்டும். அரசு நிதி இல்லையா, கோயில் நிதியிலிருந்து பள்ளி, கல்லூரிகளை கட்டும் நிலைக்கு திமுக அரசு இருக்கிறதா? அஜித்குமார் மரணம், திருத்தணி அருகில் புகார் கொடுக்க சென்ற கர்ப்பிணி மீது தாக்குதல், திருமலா பால் நிறுவன மேலாளர் மரணம் ஆகியவை காவல் துறையின் தோல்வியையும், காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வரின் தோல்வியையும் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT