Last Updated : 12 Jul, 2025 09:32 PM

1  

Published : 12 Jul 2025 09:32 PM
Last Updated : 12 Jul 2025 09:32 PM

“மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி விடுவதாக மிரட்டி திமுக உறுப்பினர்கள் சேர்ப்பு” - இபிஎஸ் குற்றச்சாட்டு

கடலூரில் இபிஎஸ் பிரச்சாரம். | படங்கள்: எம்.சாம்ராஜ்

கடலூர்: “திமுக உறுப்பினர்களாக சேரவில்லை என்றால் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட சலுகைகளை நிறுத்தி விடுவேன் என்று கூறி மிரட்டுகின்றனர்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

“கடலூர் மாவட்டத்தையே தானே புயல் புரட்டி போட்டது. அனைத்தும் அடியோடு சாய்ந்தது. பலா, முந்திரி மரங்கள் உள்ளிட்டவை உடைந்தன. அதற்கெல்லாம் நிவாரணம் கொடுத்தோம். விவசாயத் தொழிலாளர்களுக்கு விலையில்லா கறவை மாடு, விலையில்லா ஆடு, விலையில்லா கோழி வாங்கப்பட்டது. திமுக அரசு இதை நிறுத்தியது.

மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? மீண்டும் அதிமுக ஆட்சி மலர்ந்தால் ஆடு, மாடு, கோழி கொடுக்கப்படும். ஏழைப் பெண்கள் பயன்பெறும் வகையில் தாலிக்குத் தங்கம் திட்டத்தை கொண்டுவரப்பட்டது. இதனையும் நிறுத்திவிட்டார்கள். இதனை நாங்கள் மீண்டும் கொண்டுவருவோம்.

கடலூர் மாவட்டம் வேளாண் பெருமக்கள் நிறைந்த மாவட்டம். இந்த ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிக்கும் ஒன்றும் செய்யவில்லை. வேளாண் தொடக்க வங்கியில் இரண்டு முறை கடன் தள்ளுபடி செய்துள்ளோம். தானே பயலில் குடிசை வீடுகள் அனைத்தும் சேதம் ஆகின. 90 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்ட அரசு, அதிமுக அரசு. மக்கள் எப்போதெல்லாம் பாதிக்கிறார்களோ அப்போதெல்லாம் ஓடி வந்து உதவி செய்கிற அரசு, அதிமுக அரசு.

ஸ்டாலின் பேகிற இடமெல்லாம் பேசுறார்... ‘ஆயிரம் கொடுத்துள்ளேன்’ என்று. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஏன் மகளிர் உரிமைத் தொகையை உடனடியாக கொடுக்கவில்லை. இதுபற்றி தொடர்ந்து பேசினோம். 28 மாதங்கள் தொடர்ந்து பேசியதால், பெண்கள் மத்தியில் எதிர்ப்பு வந்துவிடுமோ என அஞ்சி கொடுத்தார்கள். அந்தக் குடும்பம் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கவில்லை, ஓட்டுக்காக கொடுக்கிறார்கள். உஷாரா இருங்கள்.

திமுக ஆட்சியில் கரன்ட் பில்லை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. குப்பைக்கு வரி போட்ட அரசு, திமுக அரசுதான். சொன்னதை செய்யவே மாட்டாங்கள். மக்களை ஏமாற்றி வாக்கு பெறுவதில் விஞ்ஞான மூளைக்காரர்கள் திமுகவினர். திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள். ஒரு திட்டத்தை அறிவிப்பார். அதற்கு குழு போடுவார். இதுவரை 52 திட்டங்கள் அறிவித்து 52 குழுக்கள் போட்டுள்ளார். அதோடு முடிந்துவிடும்.

ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பட தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். படங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி பல கோடி லாபத்துக்கு விற்பனை செய்கிறார். இதனால், 120 படப் பெட்டிகள் தூங்குகின்றன. திரைப்படத் துறையும் விட்டு வைக்கவில்லை .

கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் நடக்கிறது. டாஸ்மாக் கடையில் ரூ.10 வசூல் செய்வதில் மாசத்துக்கு ரூ.450 கோடி, வருஷத்துக்கு ரூ.5,400 கோடி மேலிடத்துக்கு செல்கிறது. மேலிடம் யார் என்று தெரியவில்லை. இது மிகப் பெரிய ஊழல். டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை ரூ.1,000 கோடி அளவில் ஊழலைக் கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இன்னும் எட்டு மாதம் தான் உங்கள் ஆட்டம். ஆட்சி மாற்றம் வரும். சிறப்பான ஆட்சியை அதிமுக தரும்.

கடலூர் நகரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே 18 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி பேருந்து நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், திமுக அரசு வந்தவுடன் அதனை அமைச்சர் தன் தொகுதியில் மாற்றிவிட்டார். இது கண்டனத்துக்குரியது. வேலையும் ஆரம்பித்து விட்டார்கள்.

திமுக ஆட்சி வந்தாலே சுயநலம்தான் முக்கியம். குடும்பத்தைதான் சிந்திப்பார்கள். பொது மக்களை பற்றி சிந்திக்க மாட்டார்கள். ‘உங்களுடன் ஸ்டாலின்’... இதுவரை அவர் உங்களுடன் இல்லை. தேர்தல் வருவதால்தான் ‘நான் உங்களுடன் இருக்கிறேன்’ என நினைவுபடுத்துகிறார். நான்கரை ஆண்டு காலம் அக்கறை இல்லாத முதல்வர்தான் ஸ்டாலின்.

திமுக உறுப்பினர்கள் குறைந்துவிட்டார்கள். தற்போது வீடு வீடா சென்று உறுப்பினர்களைச் சேர்க்கிறார்கள். சேரவில்லை என்றால் மகளிர் உதவித் தொகையை நிறுத்தி விடுவேன் எனக் கூறி மிரட்டி ஆட்களை சேர்க்கிறார்கள். மக்களுக்கு துரோகம் விளைவிக்கிற ஆட்சி, திமுக ஆட்சி. ஸ்டாலின் அரசு ஒரு ஃபெயிலியர் மாடல் அரசாக மாறியுள்ளது” என்று பழனிசாமி கூறினார். தொடர்ந்து நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம், அண்ணா கிராமம், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x