Last Updated : 12 Jul, 2025 08:10 PM

 

Published : 12 Jul 2025 08:10 PM
Last Updated : 12 Jul 2025 08:10 PM

பெண் வழக்கறிஞர் புகாரில் பழநி முருகன் கோயில் காவலாளி கைது  - நடந்தது என்ன?

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வந்த பெண் வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில் கோயில் காவலாளி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவலாளிகள், வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில், தனியார் நிறுவனம் மூலம் பழநி ஆண்டவர் பூங்கா ரோடு பகுதியைச் சேர்ந்த மதுரை வீரன் (27) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு மலைக்கோயிலில் மின் இழுவை ரயிலில் (வின்ச்) டிக்கெட் வழங்கும் பணியில் இருந்துள்ளார். அப்போது, அவருக்கும், பழநி கணபதி நகரை சேர்ந்த வழக்கறிஞர் பிரேமலதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், அடிவாரம் வந்த பிரேமலதா, தன்னை அவதூறாகப் பேசி, தாக்கியதாக காவலாளி மதுரை வீரன் உட்பட 5 பேர் மீது போலீஸில் புகார் செய்தார். இதனடிப்படையில் மதுரை வீரனை அடிவாரம் போலீஸார் இன்று விசாரணைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து, தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, காவலாளி தரப்பில் வழக்கறிஞர் பிரேமலதா மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒருதலைபட்சமாக செயல்பட்டு காவலாளி மதுரை வீரனை மட்டும் கைது செய்ததைக் கண்டித்து, பழநி மலைக்கோயிலில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட காவலாளிகள், அடிவாரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, வழக்கறிஞர் பிரேமலதாவுக்கு ஆதரவாக காவலாளி மதுரை வீரன் உள்ளிட்டோரை கைது செய்யக் கோரி, பழநி நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதித்தது.

இதையடுத்து, காவலாளி மதுரை வீரனை போலீஸார் கைது செய்தனர். அவரை போலீஸார் அழைத்து செல்ல முயன்றபோது, போலீஸாரை தடுத்து நிறுத்தி, காவலாளிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், மீண்டும் காவலாளியை போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

தகவலறிந்து வந்த பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி ஆகியோர் அடிவாரம் காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன், ஆய்வாளர் மணிமாறன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காவலாளிகள் போராட்டத்தால் ரோப் கார், வின்ச் ரயில் நிலையம், பேட்டரி கார் சேவை பாதிக்கப்பட்டு, பக்தர்கள் சிரமப்பட்டனர்.

இதற்கிடையில், காவலாளிக்கும், பெண் வழக்கறிஞருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பாக பக்தர் ஒருவர் எடுத்த வீடியோ, சமூக வளைதலங்களில் பரவி வருகிறது. அதில் காவலாளி எந்த தவறும் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x