Published : 12 Jul 2025 08:00 PM
Last Updated : 12 Jul 2025 08:00 PM
நாகர்கோவில்: மனிதரை விண்ணுக்கு ராக்கெட்டில் அனுப்பும் ககன்யான் திட்டத்தில், ஆளில்லா ராக்கெட் பரிசோதனை வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நடைபெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான சிறப்பு பயிலரங்கில் பங்கேற்ற வி.நாராயணன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ‘ககன்யான்’ என்ற திட்டத்தை இஸ்ரோ நடைமுறைப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின்படி, இந்தியர் ஒருவரை ஏ.ஓ.ஜி. முறைப்படி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி, அவரை அங்கே பாதுகாப்பாக வைத்திருந்து, மீண்டும் அவரை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வர இருக்கிறோம்.
இதற்கான, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திட்டம் 2012 ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டது. அப்போது இந்த திட்டத்துக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது தற்போது ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் ஆளில்லா ராக்கெட் அனுப்பப்படும். தொடர்ந்து இதுபோல 2 ராக்கெட்கள் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்படும். 2027-ம் ஆண்டு மனிதருடன் ராக்கெட் அனுப்பப்படும்.
ஏஐ தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுக்கூடங்களை இஸ்ரோ சார்பிலும் அமைத்துள்ளோம். இது மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. நிலவுக்கு மனிதனை அனுப்புவது குறித்தும் பிரதமர் அறிவித்துள்ளார். நிலவில் ராக்கெட்டை இறக்குவது எளிதான விஷயம் கிடையாது. நம்மிடம் இருக்கும் மார்க்-3 ராக்கெட் பத்தாயிரம் கிலோ எடையைத்தான் கொண்டு செல்லும். நிலவில் ராக்கெட்டை இறக்க வேண்டும் என்றால் 125 டன் எடையைக் கொண்டு செல்ல வேண்டும்.
சந்திரயானை நிலவுக்கு அனுப்பியபோது, நிலவைச் சுற்றி வரத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ‘நிலவில் நம்முடைய தேசியக் கொடியை நாட்டி விட்டு வாருங்கள்’ என்றார். அப்படியே, நிலவில் தேசியக் கொடியை நாட்டினோம். வருங்காலத்தில் நிலவில் நிலம் விற்பனை நடக்கும் என்றால், இந்தியா அங்கு அதிக இடம் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT