Published : 12 Jul 2025 07:32 PM
Last Updated : 12 Jul 2025 07:32 PM

திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கவில்லை: அதிமுக குற்றச்சாட்டு

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக உள்ள திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்தில் வரும் 14-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. கடைசியாக அதிமுக ஆட்சியில் கடந்த 2011-ஆம் ஆண்டு திருப்பரங்குன்றத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து, 14 ஆண்டகளுக்கு பிறகு தற்போதுதான் கும்பாபிஷேகம் நடக்கிறது.

இது குறித்து திருப்பரங்குன்றம் எம்எல்ஏ-வும், அதிமுக அமைப்பு செயலாளருமான விவி.ராஜன் செல்லப்பா கூறியது: “சட்டமன்றத்தில் கும்பாபிஷேகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என நான் கூறினேன். அதற்கு, முதல்வர் அனுமதி பெற்று வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். இதுவரை அவர் கூறியபடி நிதி ஒதுக்கப்படவில்லை. கும்பாபிஷேகத்துக்கு தனியார் பங்களிப்புதான் அதிகமாக உள்ளது. கும்பாபிஷேக பணிகள் குறித்து அமைச்சர்களுடைய ஆய்வுக்கு பிறகு, என்ன நடக்கிறது என்பது வெளிப்படையாக தெரியவில்லை.

தமிழகம் முழுவதும் இருந்து திருப்பரங்குன்றம் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு மக்கள் வருவார்கள். அவர்கள் தரிசிக்கக் கூடிய வகையில், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நிர்வாகம் செய்ய வேண்டும். திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறுவதற்கு என்ன ஏற்பாடுகள் செய்தார்களோ, அதேபோன்று உரிய பாதுகாப்பையும் மக்களுக்கு அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவரும், உள்ளூர் அமைச்சர்களும் உடனடியாக கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

23 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ரோப் கார் வசதி அமைய வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில், அந்த நிலை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. அதேபோல மல்டி கார் பார்க்கிங் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம், அதுவும் நிறைவேற்றப்படவில்லை. திருப்பரங்குன்றம் பகுதியை பொறுத்தவரை தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.

தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். அதேபோல வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் முறைப்படுத்த வேண்டும்,’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x