Published : 12 Jul 2025 03:02 PM
Last Updated : 12 Jul 2025 03:02 PM
சென்னை: அரசமைப்புச் சட்ட உறுப்பு 370-ஐ சேர்த்ததைப் பற்றி 75 ஆண்டுகள் கழித்து பேசுவதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது ? அரசமைப்புச் சட்டத்தையும், தேசியக் கொடியையும், வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற மதநல்லிணக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாத ஆர்.எஸ்.எஸ்.-ன் வகுப்புவாத கொள்கைகளை பிரச்சாரம் செய்கிற ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தாம் வகிக்கும் பதவிக்கான வரம்புகளை மீறி வரலாற்று ரீதியாக திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ஒரு வரலாற்றுப் பிழை என்று கூறுகிறார். இந்த கருத்துக்கள் மக்களிடையே கடும் அதிருப்தியையும், சர்ச்சைகளையும் வெளிப்படுத்தி வருகின்றன. அரசமைப்புச் சட்டப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அமைச்சரவையின் அறிவுரையின்படி தான் ஆளுநர் செயல்பட முடியும்.
அவருக்கென்று தனி அதிகாரங்கள் இல்லை என்பதை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை கூறியுள்ளது. இந்த தீர்ப்பின் புனிதத்தை சிதைக்கின்ற வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை விவாதப் பொருளாக்கி வருகிறார். இந்தியா விடுதலை பெற்ற போது 543 சமஸ்தானங்கள் இருந்தன. அந்த சமஸ்தானங்கள் விரும்பினால் இந்தியாவோடு சேரலாம், பாகிஸ்தானோடு சேரலாம் அல்லது தனி சமஸ்தானமாகவும் இருக்கலாம் என்ற உரிமைகளை அன்றைய பிரிட்டிஷ் அரசு வழங்கியது.
இந்த உரிமைகள் இந்தியா ஒரே நாடு என்கிற ஒருமைப்பாட்டை சீர்குலைக்கின்ற வகையில் அமைந்திருந்தது. இதை எதிர்கொண்டு இந்தியாவை ஒரே நாடாக இணைக்க 543 சமஸ்தானங்களோடு பேசி, இப்பிரச்சினையை தீர்க்க அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் ஆகியோர் எடுத்துக் கொண்ட தீவிர முயற்சியினால் தான் இந்திய நாடு ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே நாடாக உருவானது.
அதிலும் குறிப்பாக ஐதராபாத், ஜூனேகாத், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களை இந்தியாவோடு இணைப்பதில் கடுமையான பிரச்சினைகள் எழுந்தன. ஐதராபாத், ஜூனேகாத் ஆகிய சுதேச சமஸ்தானங்களை இணைக்க வல்லபாய் படேலின் கடுமையான முயற்சியின் காரணமாக ராணுவத்தை அனுப்பி இந்தியாவோடு இணைக்கப்பட்டது.
ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விசேஷமான நிலைமை நிலவியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசராக ஹரிசிங் இருந்து வந்தார். அவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை தனி சமஸ்தானமாக வைத்துக் கொள்ள விரும்பினார். ஆனால், பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஷேக் அப்துல்லா ஆகியோரின் அழுத்தத்தின் காரணமாக சில நிபந்தனைகளுக்கு பிறகு, மகாராஜா ஹரிசிங் அம்மாநிலத்தை இந்தியாவுடன் சேர்க்க ஒப்புக் கொண்டார்.
அன்று பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன், காஷ்மீர் மக்களின் ஒப்பற்ற தலைவர் ஷேக் அப்துல்லா அவர்களுக்கு இருந்த நட்பின் காரணமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அதன்படி, காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற ஷேக் அப்துல்லாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அரசமைப்புச் சட்ட பிரிவு 370 சேர்க்கப்பட்டது.
அம் மாநிலத்தில் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை குறித்து சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கு உரிமை இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அம்மாநிலத்திற்கென தனி அரசமைப்பு கோரப்பட்டது. 1951 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீருக்கென தனியே சட்டமன்றம் கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, மாநிலத்திற்கென அரசமைப்பு சட்டம் தயாரிக்கப்பட்டு, 1957 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சிறப்பு அந்தஸ்து அமலுக்கு வந்தது. இதற்கான பேச்சுவார்த்தைகள் 5 மாதகாலம் நடந்த பிறகே இச்சட்டப் பிரிவு அரசமைப்பில் சேர்க்கப்பட்டது.
ஆனால், பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை, காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டுமென்பதை ஒரு கோரிக்கையாகவே தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவோடு இணைப்பதை தடுப்பதற்காக பல்வேறு வகுப்புவாத பிரச்சினைகளை பிரஜா கட்சி என்ற போர்வையில் ஷியாம் பிரகாஷ் முகர்ஜி பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அவற்றையெல்லாம் எதிர்கொண்டு காஷ்மீர் மாநில மக்களின் ஏகோபித்த ஆதரவோடு இயற்கை வனப்புமிக்க அழகிய ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவோடு இணைக்கப்பட்டது.
பெரும்பான்மை முஸ்லீம்கள் வாழ்கிற காஷ்மீர் மாநிலம் அண்டை நாடான பாகிஸ்தானோடு சேராமல் மதச்சார்பற்ற இந்தியாவோடு சேர்ந்தற்கு காரணம் பண்டித நேருவும், ஷேக் அப்துல்லாவும் தான். அன்று முட்டுக்கட்டை போட்டவர்கள் இன்று , மாநில அரசின் அனுமதியையோ, சட்டசபையின் ஒப்புதலையோ பெறாமல், காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து ஜனநாயக விரோத செயலை பாஜக ஆட்சியில் செய்துள்ளனர்.
அதன்மூலம் காஷ்மீர் மாநில மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டது. இத்தகைய வரலாற்று பின்னணியை புரிந்து கொள்ளாத ஆளுநர் ஆர்.என். ரவி, அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 என்பது ஒரு வரலாற்றுப் பிழை என்று கூறுவது அவரது அரசியல் அறியாமையையும், காழ்ப்புணர்ச்சியையும் தான் காட்டுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஆளுநராக பதவி வகிக்கும் ஆர்.என். ரவி, அரசமைப்புச் சட்ட உறுப்பு 370-ஐ சேர்த்ததைப் பற்றி 75 ஆண்டுகள் கழித்து பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது ?
சமீபத்தில் கடலூருக்கு அருகே பயணிகள் ரயில் வருகையின் போது ரயில்வே கேட் மூடப்படாததால் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி மூன்று மாணவர்கள் உயிரிழந்ததற்கு ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு தான் காரணமாகும். அந்த மாணவர்கள் மரணமடைந்தது குறித்து கண்டனம் தெரிவிக்காத ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டு மக்கள் நலனில் அக்கறையில்லாதவர் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
எனவே, அரசமைப்புச் சட்டத்தையும், தேசியக் கொடியையும், வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற மதநல்லிணக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாத ஆர்.எஸ்.எஸ்.-ன் வகுப்புவாத கொள்கைகளை பிரச்சாரம் செய்கிற ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT