Published : 12 Jul 2025 06:00 AM
Last Updated : 12 Jul 2025 06:00 AM
சென்னை: மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.64.43 கோடியில் 7 விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழகம் முழுவதும் மாவட்ட விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், உள்விளையாட்டு அரங்கங்களை ஏற்படுத்துதல், நவீன உடற்பயிற்சி கூடங்கள் நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டத்தில் ரூ.9.47 கோடி மதிப்பீட்டில் செயற்கை வளைகோல் பந்து மைதானம், திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டிலும், அரியலூரில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டிலும் புதிய செயற்கை வளைகோல் பந்து மைதானம் அமைக்கும் பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக நேற்று அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து மதுரையில் ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் டைவிங் வசதியுடன் கூடிய நீச்சல் குளம், கரூரில் ரூ.6.28 கோடி மதிப்பீட்டில் புதிய நீச்சல்குளம், கோவையில் ரூ.7.95 கோடியிலும், சேலத்தில் ரூ.7.93 கோடி மதிப்பீட்டிலும் புதிய விளையாட்டு விடுதிகள் அமைக்கும் பணிகளுக்கும் துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து சென்னை ராணிமேரி கல்லூரியின் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.20 லட்சத்துக்கான காசோலையை, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும் 52-வது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கிய துணை முதல்வர், ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனைகள் கார்த்திகா மற்றும் பிரிதயர்ஷினிக்கு பயணம், தங்குமிடம் மற்றும் செலவினங்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து ரூ.1.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆர்.ராஜேந்திரன், பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், விளையாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT