Published : 12 Jul 2025 05:26 AM
Last Updated : 12 Jul 2025 05:26 AM
சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் சென்னை பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் கூறியதாவது: கடந்த ஜூன் 30-ம் தேதி திருச்சியில் பாதுகாப்புத் துறை ஓய்வூதியர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புத் துறை ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். அன்றைய தினமே 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 2000 குறைகள் ஒரு மாத காலத்தில் தீர்க்கப்படும்.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஓய்வூதியர்களின் குறைகளைக் கேட்டறிய 5 பிரச்சார வாகனங்கள் அனுப்பப்பட்டன. இந்த வாகனங்கள் மூலம் 5100 புகார்கள் பெறப்பட்டு அதில் 3 ஆயிரம் புகார்களுக்கு அப்போதே தீர்வு காணப்பட்டது. அதே இடத்தில் தீர்வுகாண முடியாத 2000 புகார்களுக்கு 21 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
இந்தியாவிலேயே ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே சென்று குறைகளுக்குத் தீர்வு காணப்படுவது இது முதல்முறை. தமிழகத்தில் அடுத்தகட்டமாக மதுரையில் நவம்பர் மாதமும், வேலூரில் அடுத்த ஆண்டு மார்ச் மாதமும் குறைதீர் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 10 சதவீதம் ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் பெறாமல் இருந்தனர். வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், வேறு மாநிலங்களுக்குச் சென்றவர்கள் வாழ்நாள் சான்று பெறாமல் இருப்பர், அவர்களை கண்டறிந்து ஓய்வூதியம் வழங்க இத்திட்டம் உதவியது.
ஓரிரு மாதங்களில் ஓய்வூதியர்கள் தொலைபேசி வாயிலாக குறைகளை நிவர்த்தி செய்ய கால் சென்டர் அமைக்கப்படவுள்ளது. மேலும் 12 மாவட்டங்களில் நேரடி குறைதீர் மையங்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின்போது பாதுகாப்பு ஓய்வூதியர்களுக்கு பிரச்சார வாகனம் குறித்தும், அதன் வாயிலாகக் கிடைக்கும் சேவைகள் குறித்தும் ஜெயசீலன் விளக்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT