Published : 12 Jul 2025 05:45 AM
Last Updated : 12 Jul 2025 05:45 AM
சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடாவிட்டால் நாம் தமிழர் கட்சி விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். பரந்தூரில் 2-வது பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான திட்டத்தை 1000 நாட்களுக்கு மேலாக ஏகனாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்த்து வருகின்றனர்.
அதை துளியும் மதிக்காமல் தமிழக அரசு இத்திட்டத்தை நிறை வேற்றியே தீருவேன் என்னும் முனைப்பில் பொதுமக்களின் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை விரைவுபடுத்தி வருகிறது. அதன்படி கடந்த மாதம் வரையறுக்கப்பட்ட நிலங்களுக்கான மதிப்பீட்டுத் தொகைகள் வெளியிடப்பட்டன.
அதைத்தொடர்ந்து ஏகனாபுரத்தில் சுற்றியுள்ள கிராமங்களில் நிலங்களை வைத்திருக்கும் வெளியூரை சேர்ந்த நில உரிமையாளர்களை அணுகி அவர்களுக்கு மதிப்பீட்டுத் தொகையை வழங்கி, நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் 5750 ஏக்கர் திட்ட அளவில் வெறும் 17.5 ஏக்கர் சொற்ப இடங்களை மட்டுமே பெற்றுவிட்டு, பொதுமக்கள் அவற்றை தாமாகவே முன்வந்து வழங்கியது போல போலியான ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளனர்.
போராடிவரும் மக்களை ஒரு முறை கூடச் சந்திக்காத மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் தரமற்ற ஆட்சி முறையின் எடுத்துக்காட்டாகும். இத்திட்டத்தை எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் என குறுக்கு வழியில் தமிழக அரசு செயல்படுவதை விட்டுவிட்டு, போராடும் பொதுமக்களை சந்தித்து திட்டத்தை கைவிட வேண்டும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடாவிட்டால் நாம் தமிழர் கட்சி விரைவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT