Published : 12 Jul 2025 08:18 AM
Last Updated : 12 Jul 2025 08:18 AM
சென்னை: திருமலா பால் நிறுவன மேலாளர் மர்ம மரணம் விவகாரத்தில் மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், கொளத்தூர் துணை ஆணையர் அன்றாட பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி (37).
திருமணமாகி குடும்பத்துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகர், முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சென்னை மாதவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்னியம்மன்மேட்டில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கருவூல மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அண்மையில் திருமலா பால் நிறுவனம் அவர்களது நிறுவன வரவு- செலவு கணக்குகளை சரிபார்த்து தணிக்கை செய்துள்ளது. அப்போது, ரூ.40 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. நவீன் அந்த பணத்தை கையாடல் செய்ததாகவும், அந்த பணத்தை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பரின் வங்கி கணக்குக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் சார்பில் கடந்த மாதம் 25-ம் தேதி கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் நவீனை நேரில் வரும்படி கூறி போனில் அழைத்து விசாரித்ததாகவும், அப்போது, ‘பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என போலீஸாரிடம் நவீன் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர மேலும் சிலர் நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு அவர் வீட்டருகே உள்ள குடிசையில் தூக்கில் தொங்கிய நிலையில் நவீன் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து வந்த புழல் போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து நவீன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கினர்.
விசாரணை தொடங்கவில்லை: இதற்கிடையில், ‘நவீன் மீது கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜனிடம் நிறுவனம் அளித்த புகாரானது விசாரணைக்காக புழல் உதவி ஆணையருக்கு அனுப்பப்பட்டு, அவர் மூலமாக மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் விஜயபாஸ்கருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதில் விசாரணை தொடங்கப்படவில்லை. அவரை காவல் நிலையம் அழைத்து விசாரிக்கவும் இல்லை. மேலும், கடைசியாக நவீன் அவரது சகோதரி, அவர் பணி செய்த பால் நிறுவனத்துக்கும் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். அதில், காவல்துறையை பற்றி எதுவும் குற்றம்சாட்டவில்லை’ என காவல் ஆணையர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
காவல் இணை ஆணையர்... இந்நிலையில், நவீன் மரணம் தொடர்பாக சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் திஷா மித்தல் விசாரணையை தொடங்கி உள்ளார். முதல்கட்டமாக மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜனை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரவழைத்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும், விசாரணை முடியும்வரை அவருக்கான துணை ஆணையர் பணிகள் எதையும் கவனிக்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. தினமும் அவர் காவல் ஆணையர் அலுவலகம் வர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT