Published : 12 Jul 2025 09:28 AM
Last Updated : 12 Jul 2025 09:28 AM
தனது குடும்பத்துப் பெண்கள் அரசியலுக்கு வருவதில் தனக்கு விருப்பமில்லை என்று சொல்லி வந்த மருத்துவர் ராமதாஸ் இப்போது வேறு வழியில்லாமல், மகனைச் சமாளிக்க மகள் ஸ்ரீகாந்தியை அரசியல் மேடைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.
தன் பாட்டுக்கு எதிர்ப்பாட்டுப் பாடும் மகன் அன்புமணியை ஒரேயடியாக ஓரங்கட்டத் துணிந்துவிட்ட பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணியின் தலைவர் பதவி காலாவதியாகி விட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். மேலும், நிர்வாகக் குழு மற்றும் மாநில செயற்குழு தீர்மானங்கள் மூலமாக கட்சியில் அனைத்து அதிகாரங்களும் தனக்கு மட்டுமே என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார் ராமதாஸ்.
இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, மகனின் குடைச்சல்களை சமாளிக்க தனது அடுத்த அரசியல் வாரிசாக மூத்த மகள் ஸ்ரீகாந்தியை முன்னிலைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார் ராமதாஸ். அதற்கேற்ப, கட்சியின் அனைத்து அசைவுகளும் இப்போது ஸ்ரீகாந்தியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அண்மையில் ஓமந்தூரில் நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்ட மேடையில் இரண்டாவது வரிசையில் அமர வைக்கப்பட்டார் ஸ்ரீகாந்தி. அண்மையில் அன்புமணியால் நீக்கப்பட்ட எம்எல்ஏ-வான அருள், “அக்கா ஸ்ரீகாந்திக்கு வணக்கங்கள்” என பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டுத்தான் பேச்சைத் தொடங்கினார். ஸ்ரீகாந்தியை பிரதானப்படுத்தி செய்தி வெளியிடுமாறு மீடியாக்களிடம் பாமக நிர்வாகிகள் மாய்ந்து மாய்ந்து கேட்டுக் கொண்டதும் கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், பூம்புகார் மகளிர் மாநாடு ஏற்பாடுகளைப் பார்வையிடச் சென்ற ராமதாஸ், “செயற்குழு கூட்டத்துக்கு முன்பும் பல கூட்டங்களில் எனது மகள் ஸ்ரீகாந்தி பங்கேற்றுள்ளார். அவருக்கு பொறுப்பு வழங்கப்படுமா எனக் கேட்கிறீர்கள். தற்சமயம் வழங்கப்படாது” என்று சொன்னதோடு நிற்காமல், “போகப் போகத் தெரியும்” என பாட்டுப்பாடி புதிர்போட்டார்.
மருமகள் சவுமியா அன்புமணியால் கசப்பான அனுபவங்களைச் சந்தித்த ராமதாஸ், மகனுக்கும் மருமகளுக்கும் சேர்த்து செக் வைக்க இப்போது மகள் ஸ்ரீகாந்தியை முன்னிலைப்படுத்துவது பாமக வட்டாரத்திலும் பேசுபொருளாகி இருக்கிறது.
இது குறித்து ராமதாஸுக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் பேசுகையில், “மகனை தனது வழிக்குக் கொண்டு வர தனக்குத் தெரிந்த அத்தனை உத்திகளையும் கையாண்டு பார்த்துவிட்டார் மருத்துவர் அய்யா. அது எதுவுமே கைகொடுக்கவில்லை என்பதால், இப்போது மகனுக்குப் பதிலாக மகளுக்கு மகுடம் சூட்டத் தயாராகிவிட்டார்.
அன்புமணி இனியும் பிடிவாதமாக இருந்தால் அவரை கட்சியை விட்டே நீக்கிவிட்டு மகளை பாமக தலைவராக கொண்டு வருவதற்கான முன்னேற்பாடாகவே ஸ்ரீகாந்திக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்திருக்கிறார். தனது முடிவுக்கு கட்சிக்குள்ளும் குடும்பத்துக்குள்ளும் என்ன மாதிரியான ரியாக்ஷன் வருகிறது என அய்யா இப்போது ஆழம் பார்க்கிறார்.
உடன்பிறந்த சகோதரி என்றாலும் அன்புமணிக்கும் ஸ்ரீகாந்திக்கும் இப்போது சுமுகமான உறவு இல்லை. தனது மகன் முகுந்தனை பாமக இளைஞர் சங்க பதவியில் அமர்த்த அன்புமணி எதிர்ப்புக் காட்டியதால் அவர் மீது ஸ்ரீகாந்தி கடுமையான வருத்தத்தில் இருக்கிறார். அய்யா இப்போது எடுத்திருக்கும் முடிவால் ஸ்ரீகாந்தியும் உற்சாகமாகி இருக்கிறார்.
அதேசமயம், அய்யா இப்படியொரு ரூட் எடுப்பது தெரிந்ததும் அவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து கடந்த 10-ம் தேதி இரவு தைலாபுரத்துக்கு வந்திருக்கிறார் அன்புமணி. அம்மாவிடம் நலம் விசாரிக்க வந்ததாக சொல்லப்பட்டாலும், மகளை முன்னிலைப்படுத்தி அய்யா எடுக்கும் அரசியல் நகர்வுகளுக்கு அம்மா மூலம் அணை போடவே அவர் வந்ததாகத் தெரிகிறது” என்றனர்.
தந்தையும் தனயனும் மாற்றி மாற்றி எழுதிக் கொண்டிருக்கும் இந்த நவீன சிந்துபாத் கதை எப்போது முடிவுக்கு வரும் என்பதே பாமக தொண்டர்களின் பதைபதைப்பாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT