Published : 12 Jul 2025 12:41 AM
Last Updated : 12 Jul 2025 12:41 AM
சென்னை: பெற்றோரால் கைவிடப்படும், ஒப்படைக்கப்படும் குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட நிலையில் கண்டறியப்படும் குழந்தைகள், மற்றவர்களால் கொண்டு வந்து ஒப்படைக்கப்படும் குழந்தைகள் குறித்து சட்டவிதிகளின்படி தகவல்கள் அளிக்கப்படுவதில்லை.
அந்த குழந்தைகளை உரிய விதிகளுக்கு உட்படாமல் தத்தெடுக்கும் சம்பவங்கள் நடக்கிறது என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தது.
எந்த ஒரு தனி நபருக்கோ, நிறுவனத்துக்கோ, மருத்துவமனைக்கோ கைவிடப்பட்ட நிலையில் ஆதரவற்ற குழந்தைகள் இருப்பது தெரியவந்தால், அதுகுறித்து குழந்தைகள் உதவி மையம் (1098), குழந்தைகள் நலக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிப்பது கட்டாயம் ஆகும்.
அதேபோல், தங்களது குழந்தையை வளர்க்க இயலாமல், ஒப்படைக்க பெற்றோர் முன்வந்தால், அதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் குழந்தைகள் நலகுழுவுக்கு தகவலளிக்க வேண்டும். குழந்தைகளை முறைப்படி தத்தெடுக்க உரிய பதிவு செய்வது அவசியம் ஆகும். ஆவணங்களின்படியும், பதிவு மூப்பு அடிப்படையிலும் அவர்களுக்கு குழந்தைகள் தத்து கொடுக்கப்படும். இந்த விதிகளை மீறி தன்னிச்சையாக குழந்தைகளை தத்தெடுப்பது சட்டப்படி குற்றம் ஆகும்.
தீவிர குற்றச் செயல்: பணத்துக்கோ, பொருளுக்கோ குழந்தைகளை விற்பனை செய்வதும் தீவிர குற்ற செயலாக கருதப்படுகிறது. இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும், கைவிடப்பட்ட குழந்தைகள் குறித்து தகவலளிக்காவிட்டாலும் உரிய சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்க முடியும். அதனால், அதனை கருத்தில் கொண்டு அனைத்து மருத்துவமனைகளும், இதுதொடர்பான பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களையும் தங்களது ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
குறிப்பாக, மகப்பேறு மருத்துவ பிரிவில் உள்ளவர்களுக்கு அவசியம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள், பதாகைகளை மருத்துவமனை வளாகத்தில் விளம்பரப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT