Published : 11 Jul 2025 08:23 PM
Last Updated : 11 Jul 2025 08:23 PM
சென்னை: ‘அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என காலவரம்பை குறிப்பிட்டு, ஜூலை 21-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் தர வேண்டும்’ என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், ‘அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீதான ஆரம்பக்கட்ட விசாரணையை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ள சூழலில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
எனவே, ஆரம்பக்கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தேர்தல் ஆணையம், அதிகார வரம்பு குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்காவிட்டால், அது அதிமுகவுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.சுரேந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனிசாமி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில். “சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி 2 மாதங்கள் நிறைவடைந்த பின்னரும், அது தொடர்பாக எந்த உத்தரவும் தற்போது வரை பிறப்பிக்கவில்லை. தேர்தல் நெருங்கும் நிலையில் விரைவாக உத்தரவு பிறப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இதுபோன்ற வழக்குகளில் 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என சுட்டிக்காட்டப்பட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில், “இந்த விவகாரத்தில் 6 புகார்கள் வந்துள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பரிசீலித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் உத்தரவு பிறப்பிக்காவிட்டால் தங்கள் அரசியல் சாசன கடமையை செய்ய தவறுகிறார்கள் அல்லவா? இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவது போலத் தெரிகிறது. குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலவரம்பு நிர்ணயித்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் குடியரசு தலைவரைவிட உயர்ந்ததா?” என கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையத் தரப்பு வழக்கறிஞர், “அரசியல் சாசனத்தில் உயர்ந்த அதிகாரி, தாழ்ந்த அதிகாரி என்று எதுவும் இல்லை. அரசியல் சாசனத்தில் அனைத்து அதிகாரிகளும் சமமானவர்கள். இந்த விவகாரத்தில் எப்போது முடிவெடுக்கப்படும் என அதிகாரிகளைக் கேட்டு தெரிவிக்கிறோம்” என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான புகார்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என காலவரம்பை குறிப்பிட்டு எழுத்துப்பூர்வமான விளக்கத்தை ஜூலை 21-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அன்றைய தினத்துக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT