Published : 11 Jul 2025 09:01 PM
Last Updated : 11 Jul 2025 09:01 PM
விழுப்புரம்: 2026-ல் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம் பலம் கூட்ரோட்டில் நடைபெற்ற பிரச்சார பயணத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். மேலும், “தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பழிபோடுவது ஸ்டாலினின் தந்திரம்” என்று அவர் சாடியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று (ஜூலை 11) மாலை மேற்கொண்டார். வானூர் சட்டப்பேரவைத் தொகுதி திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அவர் பேசியது: ”திமுக தேர்தல் அறிக்கையில் 575 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், திமுகவினரும் சொல்லி வருகின்றனர்.
100 நாள் வேலையை 150 நாட்களுக்கு வழங்குவோம், கூலி தொகையை உயர்த்துவோம் என்றார்கள். 100 நாள் வேலை 50 நாட்களாக குறைந்துவிட்டது. மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு, சிலிண்டருக்கு ரூ.100, கல்வி கடன் ரத்து மற்றும் நீட் தேர்வு ரத்து என்றனர். முதல்வர் ஸ்டாலின் எதையும் செய்யவில்லை. மக்களை ஏமாற்றி தந்திரமாக வாக்குகளை பெற்று ஆட்சிக்கு திமுக வந்துள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றனர். ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக கொடுத்த அழுத்தத்தால் உரிமைத் தொகை வந்தது. தேர்தல் வர உள்ளதால் 30 லட்சம் பேருக்கு வழங்க விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது என்றார். 8 மாதம் மட்டுமே வழங்க உள்ளனர். 52 மாதங்கள் பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். தேர்தலுக்குப் பிறகு தகுதி அடிப்படையில் என கூறி அதையும் நிறுத்திவிடுவர்.
மக்கள் செல்வாக்கை அடியோடு இழந்துவிட்டது திமுக. வரி மேல் வரி போட்டு மக்கள் தலையில் பாரத்தை சுமத்தி சாதனை படைத்துள்ளது. கட்சியும், ஆட்சியும் திமுக குடும்பத்தில் உள்ளவர்களுக்குதான். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என செல்கிறது. குடும்ப ஆட்சிக்கும், வாரிசு அரசியலுக்கும் 2026 தேர்தலில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
இந்தியாவில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டுவிட்டது. திமுகவில் மட்டும் மன்னராட்சி தொடர்கிறது. படிப்பு என்றால் பழனிசாமிக்கு கசக்கும் என திருவாரூரில் ஸ்டாலின் பேசி உள்ளார். கல்வி என்றால் எனது உயிர் மூச்சு. கல்விக்கு முக்கியத்தும் கொடுத்து அதிமுக ஆட்சியில் பல கல்லூரிகள் திறக்கப்பட்டது. விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை ஸ்டாலின் ரத்து செய்துவிட்டார். படிப்பு என்றால் உங்களுக்கு கசக்கிறதா?.
படிப்பை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அதிமுக ஆட்சியில் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து அதிக நிதிகளை ஒதுக்கி, கல்வியில் புரட்சி செய்தேன். நீங்கள் 4 ஆண்டுகளாக, கல்வி வளர்ச்சிக்கு என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள்? அப்பா பெயரை வைக்க பல்கலைக்கழகம் தொடங்குகின்றனர். மாணவர் சமுதாயம் ஏற்றம் பெற அதிமுக ஆட்சியில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டதால் 2,818 மாணவர்கள் மருத்துவம் படித்துள்ளனர். பாஜகவுடன் உறவில் இருந்தாலும், 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம் 162-ஐ பின்பற்றி 7.5 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றினோம். பதவியை பற்றி கவலைபடாமல், நாட்டு மக்கள், மாணவர்களை பற்றி கவலைப்பட்டோம். இந்த தைரியம், திராணி ஸ்டாலினுக்கு இருந்தால், அவரது தந்தை பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவாரா?
பாஜகவுக்கு அதிமுக அடிமை என்கிறார் ஸ்டாலின். அமலாக்கத் துறை சோதனைக்கு பயந்து நீங்களும், உங்கள் அமைச்சர்களும்தான் நடுங்கி கொண்டிருக்கின்றனர். திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேசிக்கொண்டே ஸ்டாலினின் தாயாரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. பின்னர் ஒப்பந்தம் முடிந்துவிட்டது. அதிமுக எதற்காகவும் அஞ்சாத கட்சி. மக்களின் நன்மதிப்பை பெற்று, இந்த இடத்துக்கு வந்துள்ளேன். அதிமுக-வை ஒழிக்க பல முயற்சிகளை ஸ்டாலின் மேற்கொண்டார். அனைத்தையும் உடைத்தெறிந்தோம். தேர்தல் நேரத்தில் அமைச்சர்கள் எங்கு இருப்பார்கள் என நாட்டு மக்களுக்குத் தெரியும்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ள நிலையில் ஓரணியில் எங்கு திரள்வது, உங்களுடன் ஸ்டாலின் என கட்சியின் வேலையை அரசு மூலமாக செய்கின்றனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது, நீங்கள் பெற்ற மனுக்கள் எங்கே போனது? தனி பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கூட்டணி கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றி பெறும்.
தொகுதி மறுவரையறை திட்டத்தால் தமிழகத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என மத்திய அரசு மீது ஸ்டாலின் பழிபோடுகிறார். இந்தத் திட்டம் கொண்டு வரப்படவில்லை. மேலும், தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களை மடை மாற்றம் செய்ய, ஸ்டாலின் தந்திரமாக பேசி வருகிறார். அதிமுகவுக்கு கூடும் மக்கள் கூட்டத்தை பார்த்து, ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. இதுவே நமக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஸ்டாலின் கூறியது என்ன? - முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட பதிவில், “உலக மக்கள்தொகை நாளில், “ஒன்றிய அரசுக்கு ஒரு நினைவூட்டல்: தமிழ்நாடு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முன்னணி வகிக்கிறது; பெண்களின் மாண்பைக் காத்து அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குகிறது; அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வியை உறுதிசெய்கிறது; நீடித்து நிலைக்கத்தக்க வளர்ச்சியை முன்னெடுக்கிறது.
ஆனால், பதிலுக்கு நமக்குக் கிடைப்பது என்ன? - குறைவான மக்களவைத் தொகுதிகள்; குறைவான நிதி ஒதுக்கீடு; நாடாளுமன்றத்தில் இருந்து ஒதுக்கப்படும் நமது குரல். ஏன்? - ஏனென்றால், தமிழ்நாடு சரியானதைச் செய்தது. அதுதான் டெல்லியை அச்சுறுத்துகிறது.
இதைவிட மோசம் என்ன என்றால், பழனிசாமியும் அவரது கட்சியும் தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார்கள். நாம் எட்டிய வளர்ச்சிக்காக நம்மைத் தண்டிக்கும் அநியாயமான தொகுதி மறுவரையறையை ஆதரிக்கிறார்கள். தெளிவாகச் சொல்கிறேன்: தமிழ்நாடு உங்களுக்கு அடிபணியாது. நாங்கள் ஒருமித்து எழுவோம்! இது டெல்லி அணிக்கு எதிரான ஓரணி! நமது மண், மொழி, மானம் காக்க இணைவீர்” என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT