Published : 11 Jul 2025 07:07 PM
Last Updated : 11 Jul 2025 07:07 PM
சென்னை: திருமலா பால் நிறுவன மேலாளரின் மர்ம மரணம் குறித்து குறித்து கேள்வி எழுப்பியுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “இன்னும் அஜித்குமார் மரணத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “சென்னை 'திருமலா’ பால் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நவீன் பொலினேனி என்பவர், 45 கோடி ரூபாய் நிறுவனப் பணத்தை கையாடல் செய்ததாக ஏற்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்கு பதியாமல் அவர் விசாரிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்ததாகவும் செய்திகள் வருகின்றன.
நவீன் தூக்கில் இருந்த குடிசையில் எந்த சேரும் இல்லை; அவரின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தன என்று செய்திகள் வருகின்றன. கைகள் கட்டப்பட்ட ஒருவர், சேர் இல்லாமல் எப்படி தூக்கில் தொங்க முடியும்? இந்த வழக்கின் அடிப்படையான கேள்வி - காவல் துறை வழக்கு பதியாமல், எதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டது? அதுவும், கொளத்தூர் துணை ஆணையரே நேரடியாக விசாரித்ததாக சொல்லப்படுகிறது. இன்னும் அஜித்குமார் மரணத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
காவல் துறை விசாரணைகள் சந்தேகத்துக்கு உரியதாக மாறி வருவதற்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். நிதி மேலாண்மை பற்றி நான் கேட்ட ஒரு கேள்வியை, கண், காது, மூக்கு வைத்து திசைத் திருப்பி சித்தரிப்பதில் இருந்த முனைப்பு, ஸ்டாலினுக்கோ, அவரின் திமுக அரசுக்கோ, ஒரு முறையாவது சட்டம் - ஒழுங்கைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு இருந்ததா? காவல் துறை நிர்வாகம் செய்யத் தெரியாத முதல்வர், தன் தொகுதி உள்ளடக்கிய காவல் மாவட்டத்தில் நடந்துள்ள இச்சம்பவத்துக்கு என்ன விளக்கம் தரப் போகிறார்?
நவீன் மர்ம மரணம் குறித்து எந்தவித குறுக்கீடும் இல்லாமல் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்; குறிப்பாக காவல் துறை வழக்கு பதியாமல் விசாரணை நடத்தியது குறித்து தீர விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். நடந்தது என்ன? - திருமலா பால் நிறுவனத்தின் மேலாளர் மர்ம மரணம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT