Last Updated : 11 Jul, 2025 05:28 PM

4  

Published : 11 Jul 2025 05:28 PM
Last Updated : 11 Jul 2025 05:28 PM

“வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி...” - ராமதாஸ் பகிர்ந்த தகவல்

கடலூர்: “என் வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது” என்று விருத்தாசலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடலூர் மேற்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 11) நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மதியம் 12.30 மணி அளவில் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “இது பிரம்மாண்ட கூட்டம். மாநில பொதுக்குழு கூட்டத்தில் 2700 பேர் கலந்து கொண்டனர், அதைவிட இது பெரிய கூட்டம்.

என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்காக பாமக தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால், என்எல்சி நிறுவனம் செவி சாய்க்கவில்லை. எங்கள் போராட்டம் தொடரும். இந்தியாவின் மிகப் பெரிய பழமையான சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துவிட்டு நான் மருத்துவ தொழில் பார்த்து வந்தேன்.

இந்த மக்களின் வாழ்நிலையைப் பார்த்து இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்று 5 நாள் கிளினிக்கில் மருத்துவம் பார்த்துவிட்டு, இரண்டு நாள் ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்தேன். மதிய உணவை மாலை 5 மணிக்கு, இரவு உணவை அதிகாலை 3 மணிக்கு சாப்பிட்டுவிட்டு ஊர் ஊராக சுற்றினேன். பேருந்தில் கால் கடுக்க நின்று பயணம் செய்தேன்.96,000 கிராமங்களுக்கு சென்று உள்ளேன். எதற்காக? உங்களுக்காக. ஒதுக்கப்பட்ட மக்களுக்காக. வாழ்வு இழந்த மக்களுக்காக. ஏமாற்றப்பட்ட மக்களுக்காக.

என் கால்கள் படாத கிராமங்களே இல்லை. 10.5 இட ஒதுக்கீடு என்று கூப்பாடு போட்டு வருகிறீர்கள். உங்களிடம் விலை மதிப்புள்ள வாக்கு உள்ளது. 10.5 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற உங்களிடம் அரிய, விலைமதிப்பற்ற ஆயுதமாக வாக்கு உள்ளது. ஆனால், நீங்கள் தேர்தல் நேரத்தில் யார் யாருக்கோ வாக்களிக்கிறீர்கள்.

உங்கள் வீடு பற்றி எரிகிறது. அதைப் பற்றி கவலைப்படாமல் ரூ.300-க்கும் ரூ.500-க்கும் பல்வேறு கூட்டங்களுக்கு செல்கிறீர்கள். மற்றவர்களுக்கு ஓட்டு போட்டால் நமக்கு பட்டை நாமம் தான் சாத்துவார்கள். நம்மிடம் 40 எம்எல்ஏ, 5 எம்.பி இருந்திருந்தால் என்எல்சி நிறுவனம் பயந்திருக்கும். உங்களுக்காக கூழ் குடித்துவிட்டு பசியை அடக்கிக் கொண்டு உழைத்தேன். உங்களிடம் இருக்கும் ஓட்டு என்ற ஆயுதத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்.

நமக்கு மானம் அதிகம், தேர்தலில் இதை காட்ட வேண்டும். நம்மிடம் பணம் இல்லை. 87 வயதாகியும் உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த முறை பாமகவுக்கு ஓட்டு போட வேண்டும். உங்களிடம் ஓட்டு கேட்க வருபவர்களிடம் ‘ஐயா சொல்லிவிட்டார், எங்கள் ஓட்டு பாமகவுக்கு’ என்று சொல்ல வேண்டும். நீங்கள் வாழ வேண்டுமென்றால் நீங்கள் ஆள வேண்டும் இதற்கு ராமதாஸ் சொல்வதைக் கேட்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி, வன்னிய சங்கத் தலைவர் அருள்மொழி மற்றும் நிர்வாகிகள் பேசினார்.

தனது 45 நிமிட உரைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “என் வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது. இதை 2 நாட்களுக்கு முன்புதான் கண்டுபிடித்தோம். இது லண்டனில் இருந்து வாங்கப்பட்ட அதிக விலையுள்ள கருவியாகும். இதை யார் வைத்தது, ஏதற்காக வைத்தார்கள் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x