Published : 11 Jul 2025 02:32 PM
Last Updated : 11 Jul 2025 02:32 PM
புதுச்சேரி: “முதல்வர் ரங்கசாமியின் மிரட்டல் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் எடுபடாது.” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: பாஜக என்.ஆர்.காங்கிரஸ் திரைமறைவு நாடகம் வெளியாகியுள்ளது. சுகாதாரத்துறை இயக்குநர் நியமனம் தொடர்பாக முதல்வர் அனுப்பிய கோப்பிலுள்ள அனந்தலட்சுமியை நிராகரித்து செவ்வேலை நியமித்துள்ளார். இயக்குநராக சிறப்பு மருத்துவம் படித்தவரைத்தான் நியமிக்க வேண்டும். ஏற்கெனவே முன்பும் முதல்வர் ரங்கசாமி அனந்தலட்சுமியை பரிந்துரைத்தபோது ஆளுநர் நிராகரித்தார்.
அப்போது ஏதும் சொல்லாமல், தற்போது போர்கொடி தூக்கினார். விதிமுறைப்படிதான் இயக்குநராக செவ்வேலை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நியமித்துள்ளார். எங்களது காங்கிரஸ் ஆட்சியின்போது ஆளுநராக இருந்த கிரண்பேடி தன்னிச்சையாக செயல்பட்டபோது நாங்கள் போராடினோம். அதை அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ரங்கசாமி ரசித்தார். தற்போது முதல்வரான ரங்கசாமிக்கு அதே நிலை வந்துள்ளது.
காங்கிரஸில் இருந்து பாஜக சென்ற எட்டப்பர் ஆளுநரை சந்தித்து முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், “அதற்கு நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் அவர் ராஜினாமா செய்தால் அடுத்த முதல்வர் நீங்கள் தான்,” என கூறியவுடன், அந்த எட்டப்பர் துணைநிலை ஆளுநர் காலில் விழுந்து நன்றி தெரிவித்து திரும்பியுள்ளார்.
சுகாதாரத்துறை இயக்குநர் பதவிக்கு ரூ. 1 கோடிக்கு பேரம் பேசப்பட்டது. முதல்வர் அலுவலகத்திலுள்ள முதன்மை புரோக்கர் ஒருவர் ரூ. 50 லட்சம் இப்பதவிக்கு முன்தொகையாக வாங்கியுள்ளார். இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. அது துணைநிலை ஆளுநர் கவனத்துக்கும் சென்றுள்ளது.
செவ்வேல், முதல்வருக்கு ஒரு பிரச்சினை இல்லை. ஆறு மதுபானத்தொழிற்சாலைக்கு ரூ.90 கோடி கைமாறியது. 100 பிராந்தி கடைகள் திறக்க முடிவு எடுத்தனர். இதுதொடர்பான கோப்புகள் ஆளுநரிடம் சென்றன. லஞ்சக்கோப்புகளை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார். ராஜினாமா செய்யப்போவதாக ஆளுநரை மிரட்டும் வேலையை ரங்கசாமி ஆரம்பித்தார். அது பிசுபிசுத்து போய்விட்டது. ராஜினாமா செய்ய போவதாக கூறிய ரங்கசாமி இப்போது துணைநிலை ஆளுநரிடம் சரண்டர் ஆகிவிட்டார்.
ஆளுநரை எதிர்த்து எங்களது ஆட்சியை நாங்கள் ராஜினாமா செய்தோம். ஆனால் தற்போது பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் நாடகமாடி மக்களை ஏமாற்றுகின்றனர். அது மக்களிடம் எடுபடாது. ஒரு நிமிடம் கூட முதல்வர் நாற்காலியை ரங்கசாமி விடமாட்டார். முதல்வர் நாற்காலிக்காக எது வேண்டுமானாலும் செய்வார்.
ஆனால் இவரது மிரட்டல் எல்லாம் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் எடுபடாது. திரைப்படத்தில் ரஜினி சொல்வது போல புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் ரங்கசாமிதான் மாப்பிள்ளை. ஆனால் போடுகின்ற சட்டை பாஜகவினுடையது. இவர் டம்மி முதலமைச்சர். மாநில அந்தஸ்தை முதல்வர் ரங்கசாமியால் வாங்க முடியாது. மத்திய அரசு தராது. அனைத்து கட்சியை டெல்லி அழைத்து செல்லமுடியாது.
வரும் தேர்தலில் காங்கிரஸ் அரசு ஆட்சி அமைத்து போராடி மாநில அந்தஸ்து பெறுவோம். முதல்வர் ரங்கசாமியிடம் காலை வாரிவிடும் எட்டப்பர்கள் கூட்டம்தான் உள்ளது. ராஜினாமா செய்தால் முதல்வர் ரங்கசாமி சிறையில் தான் இருப்பார். பாஜக அவரை சிறையில் தள்ளும். அவர் மீது 7 ஊழல் குற்றசாட்டுகள் உள்ளன. விசாரணை நடக்கவுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட ஜெயிக்கமாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT