Published : 11 Jul 2025 01:14 PM
Last Updated : 11 Jul 2025 01:14 PM
அரியலூர்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு தள்ளபட்டுள்ளார் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
அரியலூர் நகரில், ரூ.14 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 11) நடைபெற்றது. இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று, வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். முதல் நாள் பேசியதையே, மறுநாள் மறுத்துப் பேசுகிறார். அடுத்த நாள் வேறொரு புதுக் கதையை, அவரே திரித்துப் பேசுகிறார்.
தான் பேசியதையே வேறு யாரோ கண், காது, மூக்கு வைத்து திரித்துப் பேசுவதாக அவரே பேசுகிறார். பாஜக, பழனிசாமி தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டு, பாஜகவின் கொள்கைகளை பழனிசாமி பேசுகின்ற சூழலுக்கு கொண்டு வந்து விட்டது. எனவே, சுமையின் வலி தாங்க முடியாமல் இவ்வாறு பேசி வருகிறார். திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வலுவாக இருப்பதைப் பார்த்து எல்லோரையும் விமர்சனம் செய்யும் நிலைக்கு வந்து விட்டார்.
அவர் நினைப்பது நடக்கவில்லை. அவர் எதிர்ப்பாராத சுமையை சுமப்பதால் விரக்தியின் விளிம்பில் நின்று இதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். சீமானின் நிலை இப்படி ஆகிவிட்டது என்பதை நினைக்கும்போதே, பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. அவர் மனிதனையே மனிதனாக நினைத்துப் பேச மாட்டார். மாக்களாகத்தான் நினைத்து வாய்க்கு வந்தபடி பேசுவார். அதன் உச்சமாக மதுரையில் ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அவரது உண்மை நிலையை வெளிப்படுத்தும் விதமாக, அந்த காட்சிகளை தமிழக மக்கள் பார்த்து விழுந்து, விழுந்து சிரிக்கும் சூழலை ஏற்படுத்தி விட்டார். அவரது கடைசி கட்டம் நெருங்கிக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது” என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT