Published : 10 Jul 2025 10:10 PM
Last Updated : 10 Jul 2025 10:10 PM
மதுரை: தேனி வனப்பகுதியில் ஆக.3-ல் ஆடு, மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப்படும் என மதுரை ஆடு, மாடுகள் மாநாட்டில் சீமான் பேசினார்.
மதுரை மாவட்டம் விராதனூரில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில், மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற பெயரில் ஆடு - மாடுகளின் மாநாடு இன்று (ஜூலை 10) நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: “ஆடு, மாடுகள் எங்களின் செல்வங்கள். எங்கள் வாழ்க்கை, கலாச்சாரத்துடன் இணைந்து வாழும் உயிரினங்கள். ஒவ்வொருவர் வீடுகளிலும் உறவினர் போல் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறோம். கால்நடைகள் குடும்ப உறுப்பினர்களாக இருந்து வருகின்றன. காடும், காடு சார்ந்த இடங்களில் வாழ்ந்த ஆடு, மாடுகள் தற்போது அதே காட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை உடைக்க வேண்டும்.
மாட்டுக்கறி வர்த்தகம் ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. பால் வர்த்தகம் மூலம் ரூ.13.5 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. இதில் தமிழகத்தின் பங்கு ரூ.1.38 லட்சம் கோடி. இந்த பால் சந்தை மதிப்பை கூட்டுவதற்கு பதில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு சாராயம் குடிக்க வைத்து தாய்மார்களின் தாலியை அறுத்து வருகின்றனர். கால்நடைத்துறை கால்நடைகளை பற்றி கவலைப்படாத துறையாக உள்ளது. பால்வளத்துறை மாடுகளே இல்லாமல் மாட்டுப்பால் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவில் ரூ.1.7 கோடி ஹெக்டேர் மேய்ச்சல் நிலம் இருப்பதாகவும், தமிழகத்தில் 12 லட்சம் ஹெக்டேர் மேய்ச்சல் நிலம் இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த மேய்ச்சல் நிலங்களை விமான நிலையம், பேருந்து நிலையம் கட்டுவதற்காக அபகரிக்கின்றனர். காட்டுக்குள் மேய விடுவதில்லை. சமவெளியிலும் மேயவிடுவதில்லை. மாடுகள் மேய்ந்தால் காட்டில் ஆறு, அருவி உருவாகாது என்கின்றனர். நொய்யல் ஆறு, வைகை ஆறு நிலை எப்படி இருக்கிறது. இந்த ஆறுகள் சாக்கடைகளாக மாறியுள்ளன. 32 ஆறுகள் மண் அள்ளப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளது. வன விலங்குகளை பாதுகாக்க மேய்ச்சலுக்கு தடை விதிப்பதாக கூறுபவர்கள் மலைகளை குவாரிக்காக வெடி பொருட்களை கொண்டு வெடிக்க வைக்கும் போது பாதிக்காதா? மாடுகள் மேய்ந்தால் வன விலங்குகள் பாதிக்கப்படும் என்பது பைத்தியக்காரத்தனமானது.
ஆடு, மாடுகள் மேய்ப்பது அவமானம் அல்ல. அது ஒரு வருமானம். இதை உணராத வரை பொருளாதார வளர்ச்சி வராது. பகவான் கிருஷ்ணன், நபிகள் நாயகம், ஏசுபிரான் மாடு மேய்த்துள்ளனர். ஆடு, மாடு மேய்ப்பது தொழில அல்ல எங்களின் பண்பாடு, வாழ்வியலுடன் இணைந்த கலாச்சாரம். இதை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத உயிர்கள் ஆடு, மாடுகள். நாட்டு மாட்டினத்தை அழிக்க பார்க்கிறார்கள். இதை அனுமதிக்கக்கூடாது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தார்கள். அதை மீட்டெடுத்தோம். ஆடு, மாடுகளை அற்ப உயிர்கள் என நினைக்கக்கூடாது.
நாட்டில் மேய்ச்சல் நிலங்களின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும். தேனி வனப்பகுதிக்கு மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற விவசாயி சன்னாசி வனத்துறையால் தாக்கப்பட்டார். அதே இடத்தில் ஆக. 3-ல் பல ஆயிரம் மாடுகளை காட்டிற்குள் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்பட்டும் போராட்டம் நடத்தப்படும்" இவ்வாறு சீமான் பேசினார்.
ஆடு, மாடுகள் மாநாட்டில் மேடை முன்பு கொட்டடி அமைக்கப்பட்டு கிடை மாடுகள் தனியாகவும், கிடை ஆடுகள் தனியாகவும் அடைக்கப்பட்டிருந்தது. மேடை அருகே ஏராளமான ஆட்டுக் கிடாக்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. கிடை ஆடு, மாடு கொட்டடிக்கு பின்னால் கட்சியினர் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாடு தொடங்கி முடியும் வரை ஆடு, மாடுகள் பிரச்சினை செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆடு, மாடுகளுக்கு 3 நாள் பயிற்சி அளித்து நிற்க வைத்திருப்பதாக சீமான் பேசும் போது குறிப்பிட்டார். ஜல்லிக்கட்டு காளைக்கு சீமான் மரியாதை செய்யும் போது காளை திமிறியது. அதிக வெளிச்சம் இருந்தால் ஆடு, மாடுகள் மிரண்டு ஓடிவிடும் என்பதால் மாநாட்டில் விளக்கு வெளிச்சம் அதிகம் இல்லை. பட்டாசுகளும் வெடிக்கப்படவில்லை. மாநாட்டில் சீமான் மட்டுமே பேசினார். ஆடு, மாடுகள் மனிதர்களுக்கு கோரிக்கை வைப்பது போல் சீமான் பேசினார். பேச்சில் திமுக, பாஜகவை விமர்சித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT