Published : 10 Jul 2025 06:34 PM
Last Updated : 10 Jul 2025 06:34 PM
மதுரை: திருப்புவனத்தில் குடோன் கட்ட அனுமதி பெற்று, திருமண மண்டபம் கட்டிய விவகாரத்தில் 12 வாரத்தில் திருமண மண்டபத்தை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த செந்தில்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருப்புவனம் சுவாமி சன்னதி தெருவில் அதிமுக ஒன்றிய செயலாளர் புவனேந்திரன் என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்த இடத்தில் குடோன் கட்ட அனுமதி பெற்று திருமண மண்டபம் கட்டியுள்ளார்.
தற்போது செல்லமுத்து திருமண மஹால் என்ற பெயரில் இந்த திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. இந்த விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடோன் கட்ட அனுமதி பெற்று திருமண மண்டபம் கட்டியுள்ள நிலையில், அதற்காக முறையாக வரியும் செலுத்தவில்லை. எனவே, திருமண மண்டபத்துக்கான மின் இணைப்பை துண்டிக்கவும், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை இடிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மலையேந்திரன் வாதிட்டார். அரசு தரப்பில், குடோன் கட்டவே அனுமதி பெறப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், விதி மீறல் தொடர்பாக திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலர் சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விதிமுறைகள் மீறப்பட்டது உறுதியானால் திருமண மண்டபத்தை 12 வாரத்தில் இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT