Published : 10 Jul 2025 04:55 PM
Last Updated : 10 Jul 2025 04:55 PM
கும்பகோணம்: ‘என் பேச்சை கேட்காதவர்கள் என் பெயரை பயன்படுத்தக்கூடாது. வேண்டுமானால் என் இனிஷியலைப் போட்டுக் கொள்ளலாம்’ என பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்
கும்பகோணத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சி - வன்னியர் சங்க தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், பொதுச் செயலாளர் முரளி சங்கர், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் ம.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ், “5 வயது குழந்தை போல் உள்ளீர்கள் என ஒருவர் சொன்னார். அந்தக் குழந்தைதான் 3 ஆண்டுக்கு முன்பு அந்த ஒருவரை தலைவராக்கியது.
நான் இப்போது சொல்கிறேன். என் பேச்சை கேட்காதவர்கள் என் பெயரை பயன்படுத்தக் கூடாது. வேண்டுமானால் என் இனிஷியலை போட்டுக் கொள்ளலாம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பார்கள். அதுபோல, தசரத சக்கரவர்த்தி தன் மகன் ராமனை 16 வருடம் வனவாசம் செல்ல வேண்டும் என ஆணையிட்டவுடன், மகன் ராமனின் முகம் அன்று மலர்ந்த செந்தாமரை போல் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், நாம் என்ன சொல்கிறோம். செயல் தலைவராக இருந்து, மக்களை சென்று பாருங்கள், சந்தியுங்கள். பாமக கொள்கையை மக்களிடம் சொல்லுங்கள், மக்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்ளுங்கள், மக்களோடு மக்களாக வாழுங்கள். மக்களுக்காக பணி செய்ய வேண்டும் என்றுதான் சொல்கிறோம்.
நாட்டின் வளர்ச்சிக்கும், வீட்டில் வளர்ச்சிக்கும் உழைப்பவர்கள் பாட்டாளி மக்கள்தான். மத்திய அரசு பருத்திக்கு ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் வேண்டும். புதிதாக கட்டப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். கும்பகோணத்தை தனியாக கொண்டு கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கி தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கும்பகோணம் நவக்கிரக கோயில்கள் செல்ல இலவச ஆன்மிக சுற்றுலாப் பேருந்து வசதியை ஏற்படுத்த வேண்டும். மதுபான கடைகளை அகற்ற வேண்டும். பூம்புகாரில் ஆக.10-ம் தேதி நடைபெறும் மகளிர் மாநாட்டுக்கு அனைவரும் வரவேண்டும். சுமார் 2 லட்சம் மகளிர் கலந்து கொள்வார்கள்” என்றார் ராமதாஸ்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக நடைபெறும் பொதுக்குழு கூட்டம் சிறப்பாக பிரம்மாண்டமாக இருக்கிறது. எனது பேச்சை கேட்காதவர்கள் என் பெயரை போடக் கூடாது. ஆனால், இனிஷியல் மட்டும் போடலாம். மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலினுக்கு, அன்புமணி மீது உள்ள பாசம் போகாததால், அவரது புகைப்படத்தை கூட்ட மேடையில் வைத்துள்ளார்” என்றார்
ராமதாஸும், அன்புமணியும் இணைந்து செயல்பட்டால் கண்ணுக்கு அழகு என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியிருப்பது குறித்து கேட்டபோது, “ அவர் அவருடைய ஆசையை கூறியுள்ளார்” என்றார். இந்த ஆசை நிறைவேறுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “போக போகத் தெரியும்” என்ற பாடலை பாடியபடி அவர் எழுந்து சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT