Published : 10 Jul 2025 10:44 AM
Last Updated : 10 Jul 2025 10:44 AM
அரியலூர்: கோயில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் பழனிசாமி, வெள்ளை வேட்டிக்குப் பதிலாக காவி உடை அணியும் நிலைக்கு மாறிவிட்டார் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பேருந்து சேவை நீட்டிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் நிலுவைத்தொகை வைத்துள்ளதால், ஜூலை 10-ம் தேதி (இன்று) முதல் அந்த சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழகத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் அமைக்கப்பட்டதுதான் இந்து சமய அறநிலையத் துறை. அந்த துறை பணத்தில் கல்லூரி கட்டுவதற்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி எதிர்ப்பு தெரிவிக்கிறார். நீதிக்கட்சி வழியில் வந்த திராவிட இயக்கத்தின் வழியில் ஆட்சி செய்ததாக சொன்ன பழனிசாமி இப்படி பேசுவது, அவர் என்ன நிலைப்பாட்டுக்கு மாறியுள்ளார் என்பதைக் காட்டுகிறது. அவர் வெள்ளை வேட்டிக்குப் பதிலாக, காவி உடை அணியும் நிலைக்கு மாறிவிட்டார். கோயில் நிதி மட்டுமல்ல, எந்த வழியில் வந்த நிதியாக இருந்தாலும் அதை கல்விக்காக பயன்படுத்துவதில் தவறில்லை.
இதுகுறித்து ஏற்கெனவே பல விவாதங்கள் நடந்துள்ளது. அப்போதெல்லாம் கருத்து தெரிவிக்காத பழனிசாமி, தற்போது டெல்லி எஜமானர் உத்தரவின்பேரில் இப்படி பேசுகிறார். அவரது உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. அதற்கான விளைவை அவர் சந்திப்பார்” என்று அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT