Published : 10 Jul 2025 06:30 AM
Last Updated : 10 Jul 2025 06:30 AM
சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை நடத்தி வருகிறது. தொலைதூரக்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு செமினார் வகுப்புகள் நடத்துவதற்கும், பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடர்பான இதர பணிகளைக் கவனிப்பதற்கும் உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் நடந்த பல்கலைக்கழக நிதிக்குழு கூட்டத்திலும், தொடர்ந்து நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்திலும், இந்த பேராசிரியர்களை, ஆசிரியர் பற்றாக்குறையுள்ள அரசு கல்லூரிகளுக்கு அனுப்பி மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பேராசிரியர்களின் பட்டியலை கல்லூரி கல்வி ஆணையர் அலுவலகத்துக்கு பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தங்களை அரசு கல்லூரிகளுக்கு சென்று பாடம் நடத்தச் சொல்லும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர்கள், பல்கலைக்கழக வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கினர். இதில் உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் என 35-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.இப்போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT