Published : 10 Jul 2025 05:28 AM
Last Updated : 10 Jul 2025 05:28 AM
சென்னை: அதிமுகவை தோழமை கட்சியாக கருதியே அவர்களது கூட்டணி குறித்து விமர்சிக்கிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் இருந்து நான் வெளியேறியபோது, ‘‘தம்பி திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க’’ என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னை வாழ்த்தினார். அவருக்கு தம்பியாக களத்தில் நான் பணியாற்றியது அதிமுக தலைவர்களுக்கு தெரியும். பாஜகவால் அதிமுகவுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பழனிசாமி அறியாமல் இருக்கிறார்.
அதிமுக - பாஜக இடையே இணக்கமான உறவு ஏற்பட வேண்டும் என நான் எங்கேயும் சொல்லவில்லை. அது என் ஆசையும் இல்லை. திராவிட இயக்கமாக நாம் நம்பிக் கொண்டிருக்கும் அதிமுக, பாஜகவால் பாதிக்கப்படக் கூடாது, செல்வாக்கை இழக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் விமர்சிக்கிறோம்.
அதிமுக வலுவாக இருந்தால் பாஜகவால் காலூன்ற முடியாது. பாஜக காலூன்றினால் விசிகவுக்கோ, திருமாவளவனுக்கோ பாதிப்பு என்ற எண்ணம் அல்ல. ஒட்டு மொத்தமாக தமிழ் சமூகம் பாதிக்கும் என்ற அச்சம் இருக்கிறது. அதிமுக மீது எனக்கு பகை உணர்ச்சியோ, வெறுப்பு உணர்ச்சியோ இல்லை.
பாமக, தேமுதிக ஆகியவை பாஜகவோடு இருந்தபோது நான் பேசவில்லையே. அதிமுகவை தோழமை இயக்கமாக கருதுவதால் கூட்டணி குறித்து விமர்சிக்கிறோம். தோழமை வேண்டாம் என அவர்கள் கருதினால் நான் கருத்தை முன்வைக்கப் போவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT