Published : 10 Jul 2025 05:11 AM
Last Updated : 10 Jul 2025 05:11 AM
சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் அடிப்படையில் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அருணா. இயக்குநர் பாரதிராஜா இயக்கிய கள்ளுக்குள் ஈரம் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மகரந்தம், சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, நாடோடி ராஜா, டார்லிங் டார்லிங் டார்லிங் உட்பட தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடத்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த இவர், தொழிலதிபரான மோகன் குப்தா என்பவரை திருமணம் செய்து கொண்டு, குடும்பத்துடன் சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் வசித்து வருகிறார். வீடு, பங்களாவில் உட்கட்டமைப்பு அலங்கார பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை மோகன் குப்தா நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மோகன் குப்தாவின் நீலாங்கரையில் உள்ள வீட்டில் நேற்று காலை 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 7 மணி முதல் சோதனை நடத்தினர். மோகன் குப்தா நடத்தி வரும் நிறுவனத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனாலும், எந்த அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றது, இந்த சோதனைக்கு அது மட்டும்தான் காரணமா, சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் சிக்கியிருக்கிறதா என்ற எந்த விவரமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெளியிடவில்லை. சோதனை முடிவடைந்த பிறகே சோதனை தொடர்பான முழு விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT