Published : 10 Jul 2025 04:58 AM
Last Updated : 10 Jul 2025 04:58 AM
சென்னை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடந்தது வன்கொடுமை அல்ல பெண் கொடுமை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை குற்றம்சாட்டி உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ‘‘தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதற்கு சாதிய ஒடுக்குமுறையே காரணம். அதை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது’’ என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், ‘‘வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும். செல்வப்பெருந்தகையை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா?’’ என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார் தெரிவித்திருந்தார். மேலும், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், வல்லக்கோட்டை கோயிலில் நடந்தது வன்கொடுமை அல்ல பெண் கொடுமை என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: திருச்செந்தூரில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் முருகனை தரிசிக்க நினைத்தேன்.
இறை சேவகர்களின் ஏற்பாடுகள், வழிபாடுகளைவிட சேகர்களின் கெடுபிடியும், விளம்பரமும்தான் அதிகமாக இருந்தது. இதனால், வல்லக்கோட்டையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஒரு பக்தையாக மட்டுமே கலந்து கொண்டேன்.
முத்தரசர்கள் முனகுவதைப்போல எந்த இருக்கையும் எனக்கு அங்கு அளிக்கப்படவில்லை. அங்கிருந்தவர்களின் அனுமதி பெற்று, என்னுடன் வந்தவர்களை விட்டுவிட்டு, நான் மட்டும் கோயில் கும்பாபிஷேகத்துக்கு மேலே போடப்பட்ட மேடையில் ஏறினேன். தாமதமாக பதவிகளை தோளில் சுமந்து வந்த சிலர், தன்னுடன் வந்தவர்களையும் அழைத்து கொண்டு மேலே ஏறினார்.
கும்பாபிஷேகம் முடிவடைந்து சிறப்பு தரிசனத்தைக் காண, பொதுமக்களோடு சென்று முருகன் முன்னால் அமர்ந்தேன். ஆனால் பெருமைமிகு பதவியாளர் சிறப்பு வழியை திறக்க வேண்டும் என்று காத்திருந்து, பின்னர் சிறப்பு கதவு திறக்க சற்று தாமதமானதால் கோபம் கொண்டு சென்றுவிட்டார்.
அதை சாதியின் வெளிப்பாடு என்று தவறாக பிரகடனப்படுத்தி, பொதுமக்கள் தரிசனத்தையும் ஆணவத்தோடு ரணப்படுத்தி அவர் சென்றதை சில ரவிக்குமார்கள், அதை வன்கொடுமை என மாற்றிப் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெண்கள் எல்லாம் போகும்போது நான் போகக்கூடாதா என்று பெருந்தகை கேட்டிருக்கிறார். ஆக அங்கு நடந்தது வன்கொடுமை அல்ல பெண் கொடுமைதான்.
திருப்பதியில் பல மணி நேரம் காத்திருக்கும்போது உங்களால் தமிழக கோயிலில் காத்திருக்க முடியாதா, அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த நாடகங்களை எல்லாம் முருகன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். பதவியை சுமந்து வந்தவர்கள் பழியை சுமத்தி சென்றிருக்கிறார்கள். பக்தியை சுமந்து பெரும் பக்தியாளர்களாக வந்தால் ஆசீர்வதிப்பார். பதவியை சுமந்து ஆணவப் பெருந்தகையாளராக வந்தால்? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT