Published : 10 Jul 2025 04:40 AM
Last Updated : 10 Jul 2025 04:40 AM
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கடந்த 2 நாள் பயணத்தில் எழுச்சியுடன் திரண்ட மக்களே அதற்கு சாட்சி என்று பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்ற உயரிய லட்சியத்துடன் எனது எழுச்சிப் பயணத்தை கோவையில் கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கினேன். இந்த பயணத்தின்போது மக்கள் என்னிடம் சொல்லிய விஷயங்கள், கவலைகள், வேதனைகள், அவர்கள் படும் அல்லல்கள், சோகங்கள் சொல்லொண்ணாதவை.
உங்களின் (முதல்வர் ஸ்டாலின்) காட்டாட்சியும், கொடுங்கோல் ஆட்சி பற்றியும் விவசாயிகள், நெசவாளர்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், செங்கல் சூளை உற்பத்தியாளர்கள், நகைத் தொழில் செய்பவர்கள், சிறு குறு தொழில் நிறுவனத்தினர், பஞ்சாலை உரிமையாளர்கள் என்று பலதரப்பட்ட மக்கள்படும் கஷ்டங்களை சந்தித்தபோது எனது நெஞ்சம் கலங்கியது. மனவேதனை அடைந்தேன். ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஆளும் உங்கள் அரசின் மீது கடுங்கோபத்தில் இருக்கின்றன.
மின்கட்டணம், வரிகள் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தெல்லாம் என்னிடம் சொல்லி, இதற்கெல்லாம் முடிவாக அதிமுக ஆட்சிதான் வரவேண்டும் என்று எனது கரங்களைப் பிடித்துக் கவலைகளை தெரிவித்தனர். தமிழகத்தில் இப்போது இருக்கும் இருண்ட காலத்தை மாற்றி, இழந்த பொற்காலத்தை நான் மீட்டுத் தருவேன் என்று உறுதி அளித்திருக்கிறேன்.
திமுக அரசின் 50 மாத ஆட்சியில் தமிழக மக்களுக்கு நீங்கள் கொடுத்த பரிசு ரூ.4 லட்சம் கோடி கடனை அவர்கள் தலையில் சுமத்தியதுதான். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவருவேன் எனச் சொன்னீர்களே, கொண்டுவந்தீர்களா. முதியோர் கொலைகள், திட்டமிட்ட தொடர்ச்சியாக அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை யாருக்குமே பாதுகாப்பில்லை. நாளுக்குநாள் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள், மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும் போதைப் பொருள் புழக்கம், கள்ளச்சாராய மரணங்கள், 25-க்கும் அதிகமான காவல் நிலைய மரணங்கள் என்று மக்கள் உங்கள் ஆட்சியின் மீது வஞ்சினம் கொண்டிருக்கின்றனர்.
நீங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும்போது, மக்கள் கோபத்தை நேரில் எதிர்கொள்ள இயலாமல் பரிதவிப்பதை யாராலும் மாற்ற முடியாது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். அனைத்துத் தரப்பு மக்களின் பேராதரவுடன் மீண்டும் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கடந்த 2 நாட்கள் நான் சென்ற பிரச்சார சுற்றுப் பயணத்தின்போது திரண்டு வந்த மக்களின் எழுச்சியும், அவர்கள் கொடுத்த பேராதரவுமே சாட்சி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT