Published : 10 Jul 2025 01:13 AM
Last Updated : 10 Jul 2025 01:13 AM
சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வாகனம் மற்றும் கணினி வாங்குவதற்கான கடனுதவி அளிப்பதற்கு தேவையான விவரங்களை சமர்பிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,455 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதே போல், பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இதற்கிடையே, அரசு ஊழியர்கள் பைக், கார், கணினி உட்பட சில பொருட்கள் வாங்குவதற்கு தமிழக அரசால் கடன் மற்றும் முன்பணம் தரப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு விண்ணப்பித்த பணியாளர்களுக்கு பணம் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக புகார்கள் நிலவுகின்றன.
இதை சரி செய்து கடனுதவியை துரிதமாக வழங்கு வதற்கான பணிகளை கருவூலம் மற்றும் கணக்குத்துறை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகத்தின் நிதிக் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்; கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநரின் கடிதத்தில் நடப்பு நிதியாண்டுக்கு (2025-26) கடன் மற்றும் முன் பணத்துக்கான (வாகனம், கணினி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு பெறுவதற்கான கடிதம் அனுப்ப பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது.
புதிய படிவம்: இதையடுத்து, ஏற்கெனவே அனுப்பி நிலுவையில் உள்ள கடன் மற்றும் முன்பணம் தொடர்பான விண்ணப்பங்களுக்கும், இனி அனுப்பவுள்ள விண்ணப்பங்களுக்கும் தற்போது புதிதாக வழங்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்வது கட்டாயமாகும்.
அதேபோல், அதில் கூறியுள்ள அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுமாறு அனைத்து முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அப்போதுதான் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT