Published : 09 Jul 2025 09:13 PM
Last Updated : 09 Jul 2025 09:13 PM
சென்னை: வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்த செட்-ஆப் பாக்ஸ்களுக்கு பதிலாக ரூ.500 மதிப்பிலான புதிய செட்-ஆப் பாக்ஸ்களை பொருத்த நிர்பந்திப்பதாக அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் நடைபெற்று வரும் சீர்கேடுகளை முதல்வரின் கவனதுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தின் மாநில தலைவர் சுப.வெள்ளைச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகத்தை சந்தித்து இன்று கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகம் முழுவதும் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் 85 லட்சம் பேர் உள்ளனர். இதில் அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் 11 லட்சம் பேர். இந்தியாவில் வேறு எங்கும் அரசு கேபிள் டிவி கிடையாது. தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் ஒளிபரப்பை எடுத்து நடத்தி வரும் கேபிள் ஆபரேட்டர்களுக்கு முறையான உரிமம் மத்திய அரசால் வழங்கப்படாததால், எந்த நேரத்திலும் சிக்னல்கள் நிறுத்தப்படலாம் என்ற பயத்துடனே ஆபரேட்டர்கள் தொழிலை நடத்தி வருகின்றனர்.
இவ்வளவு நெருக்கடியான நேரத்தில், இலவசமாக வழங்கி வந்த செட்-ஆப் பாக்ஸ்களை நிறுத்திவிட்டு, புதிதாக செட்-ஆப் பாக்ஸ்களை வாங்கு வதற்கு தனியார் நிறுவனத்துடன் அரசு கேபிள் டிவி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் விலை ரூ.500 ஆக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இதையொட்டி கேபிள் டிவி ஆபரேட்டர்களை காசு கொடுத்து இந்த செட்-ஆப் பாக்ஸ்களை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு அத்தனியார் நிறுவனம் அதிகாரத்தை பயன்படுத்தி நிர்பந்தித்து வருகிறது.
ஏற்கெனவே அரசு கேபிள் டிவியில் சேனல்கள் ஹெச்.டி தரமின்றி ஒரே ஒரு பேக்கேஜ் உடன் மட்டுமே வழங்கப்பட்டு வரும் சூழலில், தனியார் நிறுவனங்கள் பல்வேறு பேக்கேஜ்களை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன. இந்நிலையில் செட்-ஆப் பாக்ஸ்களை மாற்றி புதிய செட்-ஆப் பாக்ஸ்களுக்காக பணம் கேட்டால் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும். ஆபரேட்டர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பார்கள். இப்பிரச்சினைகளில் முதல்வர் தலையிட்டு, கேபிள் டிவி வாடிக்கையாளர்களையும் ஆபரேட்டர்களையும் பாதுகாக்க வேண்டும்” என்று வெள்ளைச்சாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT