Published : 09 Jul 2025 08:41 PM
Last Updated : 09 Jul 2025 08:41 PM
மதுரை: மதுரையில் விரைவில் மாநாடு நடத்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகள் கூட்டணிக் கணக்கு பேச்சுவார்த்தைகளை தொடங்கி தேர்தல் வியூகங்களை தீவிரப்படுத்தியுள்ளன. ஆளும் திமுக தங்களது 4 ஆண்டு ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியின் குறைபாடு, சட்டம் - ஒழுங்கு போன்ற பிரச்சினைகள் மற்றும் பல்வேறு விமர்சனங்களையும் மக்களிடம் சென்றடைய செய்கினறனர்.
அந்த வகையில் தேர்தல் நேரம் நெருங்குவதால் தென் மாவட்டங்களை மையமாக வைத்து திமுக மதுரையில் தங்களது கட்சியின் மாநில பொதுக் குழுக் கூட்டத்தை மதுரை உத்தங்குடி பகுதியில் ஜூன் 1-ம் தேதி நடத்தியது. இதற்குப் போட்டியாக ஒத்தக்கடை பகுதியில் மையக்குழு நிர்வாகிகள் ஆலோசனை என்ற பெயரில் மாநாடு போன்ற ஒரு கூட்டத்தை மத்திய அமைச்சர் அமித் ஷாவை பங்கேற்கச் செய்து பாஜக நடத்தியது.
இதன்பின், இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ல் முருக பக்தர் மாநாடு நடத்தினர். இது பக்தர்கள் மாநாடாக இருந்தாலும் பாஜக, கூட்டணி கட்சியினர் பங்கேற்றதால் இதுவும் ஓர் அரசியல் கட்சி மாநாடாகவே கருதப்பட்டது. பிற கட்சிகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூப்பிக்கும் விதமாக திமுகவின் கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி ஜூலை 6-ல் பிரம்மாண்ட் பேரணி, மாநாட்டை நடத்தியது. இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி சார்பில் ‘ஆடு, மாடுகள் மாநாடு’ என்ற பெயரில் மதுரை விராதனூர் பகுதியில் நாளை (ஜூலை 10) மாநாடு நடத்துகிறார் சீமான்.
இந்த வரிசையில் கடந்த ஓன்றரை ஆண்டுக்கு முன்பு புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தென் மாவட்டங் களை மையப்படுத்தி பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. அதுவும் மதுரையில் நடத்த அக்கட்சி திட்டமிடுவதாக கூறப்படு கிறது. இதற்காக மாநாடு இடம் தேர்வு செய்யும் பணியை அக்கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி, கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் 6 பேர் கொண்ட குழு இன்று மதுரை வந்துள்ளது. அவர்கள் மதுரை ரிங்ரோடு உள்ளிட்ட மதுரை சுற்றிலும் சில இடங்களுக்கு சென்று பார்த்தாக தகவல் வெளியாகியது.
இதுகுறித்து அக்கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘தென்மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் எங்களது கட்சி பிரம்மாண்ட மாநாட்டை நடத்தலாம் என கட்சியின் தலைவர் விஜய்யிடம் தெரிவித்தோம். இதன்மூலம் தென் பகுதியில் கட்சிக்கு எழுச்சி ஏற்படும் என அறிவுறுத்தினோம். புதிய அரசியல் கட்சி தொடக்கம், மாநாடு போன்ற கட்சிகளின் முக்கிய கூட்டங்களை மதுரையில் நடத்துவது ‘சென்மென்ட்’ டாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக நாமும் நடத்தலாம் என தெரிவித்தோம்.
நிர்வாகிகள், தொண்டர்களின் ஆலோசனைகளை கேட்ட தலைவர் விஜய், தென்மாவட்டங்களை மையப் படுத்தி ஓரிரு மாதத்தில் கட்சி மாநாடு நடத்தலாம் என திட்டமிட்டுள்ளார். இதையொட்டியே தலைவரின் அறிவுரையின்படி 6 பேர் மதுரை வந்துள்ளனர். உள்ளூர் நிர்வாகிகளுடன் மதுரையில் மாநாடுக்கான இடங்களை பார்க்கின்றனர் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தை தேர்வு முயற்சித்துள்ளோம். இதற்காக சென்னையில் இருந்து வந்துள்ள நிர்வாகிகள் ஓரிரு நாள் மதுரையில் முகாமிட்டு இடத்தை தேர்வு செய்கின்றனர்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT