Published : 09 Jul 2025 07:57 PM
Last Updated : 09 Jul 2025 07:57 PM

சொத்து வரி முறைகேடு புகார்: மதுரை மாநகராட்சி 5 மண்டல தலைவர்கள் ராஜினாமா ஏற்பு

மதுரை: மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் 5 மண்டலத் தலைவர்கள் ராஜினாமாவும் ஏற்கப்படுவதாக மேயர் இந்திராணி இன்று அறிவித்தார்.

மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி முறைகேடு தொடர்பாக ஒய்வு பெற்ற உதவி ஆணையர் ரங்க ராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமரன் மற்றும் கணிணி ஒப்பந்ததாரர்கள் 6 பேர் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், மாநகராட்சி மண்டலங்கள் - 2, 3, 4, 5 ஆகியவற்றில் உள்ள 150 கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து முறைகேடு செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, திமுக மண்டலத் தலைவர்களான வாசுகி (கிழக்கு), சரவண புவனேஷ்வரி (வடக்கு), பாண்டி செல்வி (மத்தி), முகேஷ் சர்மா (தெற்கு) மற்றும் சுகிதா (மேற்கு) ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர். சொத்து வரி முறைகேட்டை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்நிலையில், அமைச்சர் கே.என்.நேரு மாநகராட்சி அலுவலகத்தில், 4 திமுக மண்டலத் தலைவர்கள், மேயர் இந்திராணி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார். மண்டலம்-1ல் முறைகேடு நடக்கவில்லை என்று கூறி அந்த மண்டல தலைவரை திருப்பி அனுப்பி விட்டனர். மற்ற மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஷ்வரி, முகேஷ் சர்மா, பாண்டி செல்வி, சுவிதா மற்றும் நிலைக்குழு தலைவர்கள் மூவேந்திரன் (நகர அமைப்பு), விஜயலட்சுமி (வரி விதிப்பு) ஆகியோரிடம் ராஜினாமா கடிதங்கள் எழுதி வாங்கப்பட்டன.

இதையடுத்த சில மணி நேரங்களில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவில், மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டலத் தலைவர்களை யும் ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டார். ஆனால், மண்டலம்-1ன் தலைவர் வாசுகியிடம் ராஜினாமா கடிதம் எழுதி வாங்காத நிலையில், அவரையும் சேர்த்து ராஜினாமா செய்ய உத்தரவிட்ட தால் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று திடீரென மண்டலம்-1 தலைவர் வாசுகி மாநகராட்சி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு ராஜினாமா கடிதம் எழுதி வாங்கப்பட்டது. அந்த கடிதத்தை மேயர் இந்திராணி பெற்றுக் கொண்டார்.

இவரோடு சேர்த்து 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா கடிதங்களையும் ஏற்றுக் கொள்ளுமாறு அரசிடமிருந்து உத்தரவு வந்தது. இதையடுத்து, அனைவரின் ராஜினாமா கடிதங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி வரலாற்றில் முறைகேடு புகார் தொடர்பாக ஒட்டுமொத்த மண்டலத் தலைவர்களையும் ராஜினாமா செய்ய வைத்தது இதுவே முதல்முறையாகும். காலியான மண்டலத் தலைவர்கள் மற்றும் 2 நிலைக் குழு தலைவர்கள் பதவிகளுக்கும் புதிய நபர்கள் நியமிக்கப் படுவார் களா அல்லது சட்டப்பேரவை தேர்தல் வரை இதே நிலை நீடிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x