Published : 09 Jul 2025 05:55 PM
Last Updated : 09 Jul 2025 05:55 PM
சென்னை: திருத்தணி தொகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 14ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருத்தணி தொகுதியில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாததால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி அரசு மருத்துவமனையில், 4 அடுக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் முழுமை பெறாத நிலையில், கடந்த ஏப்.18-ம் தேதி அவசர கதியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுவரை இம்மருத்துவமனை நோயாளிகளின் பயன்பாட்டுக்கு வரவில்லை. மின் இணைப்பு இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. மேலும், ஸ்கேன் எடுக்கும் அறைகள் சிறிய சிறிய அறைகளாகக் கட்டப்பட்டுள்ளதால், அவை இடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டு வருகின்றன. மொத்தத்தில், மக்கள் வரிப் பணம் பல்வேறு வகைகளில் வீணடிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிப்பட்டு அடுத்த கோனேட்டம்பேட்டை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத காரணத்தால், நோயாளிக ள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். திருத்தணி புதிய பேருந்து நிலையம் கட்ட, எனது ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டது. பின்னர், இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு 2022-ம் ஆண்டு புதிய மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. ஆனால், இதற்கான பணிகள் இன்னும் முழுமைபெறவில்லை.
திருத்தணி நகரில் கிராம நத்தத்தில் வசிக்கும் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் பட்டா வழங்கப்படவில்லை. திருத்தணி மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திருப்பாற்கடல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.
இந்நிலையில், திருத்தணி தொகுதி வாழ் மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து அதிமுகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் வரும் ஜூலை 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு திருத்தணி கமலா திரையரங் கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT