Last Updated : 09 Jul, 2025 05:24 PM

6  

Published : 09 Jul 2025 05:24 PM
Last Updated : 09 Jul 2025 05:24 PM

“எனது கரங்களைப் பிடித்து கவலைகளைத் தெரிவித்த கோவை மக்கள்...” - அதிமுகவினருக்கு இபிஎஸ் மடல்

கோவையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி.

சென்னை: “பலதரப்பட்ட மக்கள் பல வகைகளிலும் படும் கஷ்டங்களை நேரில் சந்தித்தபொழுது எனது நெஞ்சம் கலங்கியது; மன வேதனை அடைந்தேன். அதிமுக ஆட்சிதான் வர வேண்டும் என்று எனது கரங்களைப் பிடித்து கவலைகளைத் தெரிவித்தனர்” என்று கோவை பிரச்சார சுற்றுப் பயணம் குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அதிமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடலில்: ‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ - ஜூலை 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் கோவையில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்த போது ஏற்பட்ட மறக்க முடியாத தருணங்களில் ஒரு சில... ‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்கிற உயரிய லட்சியத்துடன் எனது எழுச்சிப் பயணத்தை கோவையில் ஜூலை 7 அன்று துவங்கினேன். மக்களின் அளவற்ற அன்பும், பேராதரவும் என்னை, அவர்களில் ஒருவனாகவே எண்ணச் செய்தது. ஆனால், மக்கள் என்னிடம் சொல்லிய விஷயங்கள், கவலைகள், வேதனைகள், அவர்கள் படும் அல்லல்கள், சோகங்கள் சொல்லொண்ணாதவை.

ஸ்டாலின் மாடல் அரசின் அக்கிரமங்களினாலும், அட்டூழியங்களினாலும், செயலற்ற தன்மையாலும் நம் மக்கள், எதிர்பார்த்ததை விட அதிகமாக பாதிக்கப்பட்டிருகின்றார்கள் என்பதை நான் பார்த்து மனம் நொந்தேன். ஸ்டாலின் அவர்களே... உங்களின் காட்டாட்சியும், கொடுங்கோல் ஆட்சி பற்றியும் எனக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், விவசாயிகள், நெசவாளர்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், செங்கல் சூளை உற்பத்தியாளர்கள், நகைத் தொழில் செய்பவர்கள், சிறு, குறு தொழில் நிறுவனத்தினர், பஞ்சாலை உரிமையாளர்கள் என்று எண்ணற்றோரை எனது எழுச்சிப் பயணத்தில் சந்தித்தேன். பலதரப்பட்ட மக்கள் பல வகைகளிலும் படும் கஷ்டங்களை நேரில் சந்தித்தபொழுது எனது நெஞ்சம் கலங்கியது; மன வேதனை அடைந்தேன்.

மின் கட்டண உயர்வால் பொதுமக்களும், மின் நிலைக் கட்டண உயர்வால் தொழில் நிறுவனத்தினரும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். வரி உயர்வாலும், விளைச்சலுக்கு சரியான விலை இல்லாமலும், வரிச் சுமையாலும் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டாலும், நிர்வாகச் சீர்கேட்டாலும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் ஆளும் உங்கள் அரசின் மீது கடுங்கோபத்தில் இருக்கின்றனர். இவற்றையெல்லாம் என்னிடம் சொல்லி, இதற்கெல்லாம் முடிவாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான் வர வேண்டும் என்று எனது கரங்களைப் பிடித்துக் கவலைகளை தெரிவித்தனர்!

உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் ஸ்டாலின் அவர்களே... தமிழகத்தில் இப்போது இருக்கும் இருண்ட காலத்தை மாற்றி, இழந்த பொற்காலத்தை நான் மீட்டுத் தருவேன் என்று உறுதி அளித்திருக்கிறேன். திமுக-வின் விடியாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழ்நாட்டுக்கு விரைவில் விடிவு காலம் வரவேண்டும் என்கின்ற மக்களின் கூக்குரலை நானறிவேன்; ஏன் இந்த நாடே அறியும்!

மு.க.ஸ்டாலின் அவர்களே... உங்கள் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த 50 மாதங்களில், தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா ? கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் கோடி கடனை அவர்கள் தலையில் சுமத்தியதுதான். திமுக ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைத் தருவோம் எனச் சொன்னீர்களே… செய்தீர்களா ?

அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3.50 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும், மேலும் 2 லட்சம் பணியிடங்கள் என்று மொத்தம் 5.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள். அரசுத் துறைகளில் கடந்த 50 மாத காலத்தில் உங்களின் விடியா அரசு உருவாக்கிய வேலை வாய்ப்புகள் வெறும் ஐம்பதாயிரத்தைக் கூட தாண்டவில்லை என்பதுதானே உண்மை. (அதுவும் கடந்த 4 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களின் காலிப் பணியிடங்களே 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது). எத்தனை நாளைக்குத்தான் இந்த உண்மையை மறைப்பீர்கள்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவேன் எனச் சொன்னீர்களே ? கொண்டு வந்தீர்களா ? பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக உரிய தேதியில் சம்பளம் தரவில்லையே. சில கல்விக் கூடங்களில் அரங்கேறிய பாலியல் வன்முறைகளை நினைத்து மக்கள் மன வேதனையில் இருக்கிறார்களே... ஒடுக்கப்பட்டோரும், பாட்டாளி வர்க்கமும் உங்கள் ஆட்சியில் மகிழ்ச்சியாய் இல்லை. முதியோர் கொலைகள், திட்டமிட்ட தொடர்ச்சியாக அரங்கேறிக் கொண்டே இருக்கின்றதே. இதுபற்றியெல்லாம், உங்களையும், உங்கள் ஆட்சியையும் நோக்கி சாமானிய மக்கள் தினமும் கேள்வி எழுப்புவதும், உங்களிடம் பதில் இல்லாததை நினைத்து உங்களுக்கு ஜுரம் வந்துவிட்டதா ஸ்டாலின் அவர்களே!

சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரைக்கும் யாருக்குமே பாதுகாப்பில்லை. நாளுக்குநாள் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்; மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும் போதைப் பொருள் புழக்கம்; கள்ளச் சாராய மரணங்கள்; 25-க்கும் அதிகமான காவல் நிலைய மரணங்கள்; கனிம வளக் கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர்கள் விபத்தில் மரணிப்பது; கல் குவாரிகளை திமுக-வினர்களே விதிகளை மீறி ஏலத்தில் எடுத்து சுரண்டுவது; வேங்கைவயலில் பாதிக்கப்பட்டவர் மீதே குற்றம்சாட்டியது; போலீஸ் விசாரணயில் உயிரிழந்தவரின் தாயாரிடம் கைபேசி மூலம் பேசும்போது, பொறுப்பற்றத்தனமாக Sorry மா எனச் சொல்லி பொறுப்பைத் தட்டிக் கழித்தது என்று தமிழக மக்கள் உங்கள் மீதும், உங்கள் ஆட்சியின் மீதும் வஞ்சினம் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்து தான் உங்களுக்கு ஜுரம் வந்துவிட்டதா ஸ்டாலின் அவர்களே..!

வெற்று விளம்பரங்கள் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஆரம்பிக்கபபட்ட திட்டங்களுக்கு புகைப்படம் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்பவர் யார் என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்துவிட்டது; புரிந்துவிட்டது. அதைத் தான் எனது இந்த எழுச்சிப் பயணத்தில் மக்கள் என்னிடம் கோரிக்கையாக வைத்தார்கள்.

நீங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும்போது இதை உணர்வீர்கள். மக்கள் கோபத்தை நேரில் எதிர்கொள்ள இயலாமல் பரிதவிப்பதை யாராலும் மாற்ற முடியாது. வாக்கு செலுத்தி உங்களை முதல்வராக்கிய மக்களின் கேள்விக்கு உங்கள் பதில் தான் என்ன ? அந்த பதில் தெரியாமல் தான் உங்களுக்கு ஜுரம் வந்துவிட்டது போலும்!

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். அனைத்துத் தரப்பு மக்களின் பேராதரவுடன் மீண்டும் ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அ.இ.அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதற்கு, கடந்த இரண்டு நாட்கள் நான் சென்ற பிரச்சார சுற்றுப் பயணத்தின் போது திரண்டு வந்த மக்களின் எழுச்சியும், அவர்கள் கொடுத்திட்ட பேராதரவுமே சாட்சி” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x