Published : 09 Jul 2025 09:03 AM
Last Updated : 09 Jul 2025 09:03 AM
அதிமுக உடன் மீண்டும் கூட்டணி சேர்ந்த நாள் முதல் வார்த்தைக்கு வார்த்தை ‘கூட்டணி ஆட்சி’ என்று சொல்லிவரும் பாஜக-வின் பேச்சு அதிமுக-வினரின் வயிற்றில் இப்போதே புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது. அதிமுக இதற்கு முன்பும் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால், அப்போதெல்லாம் கொடுத்ததை பெற்றுக்கொள்ளும் மனப்பான்மையோடு இருந்தது பாஜக. ஆனால் இப்போது, கேட்பதை கொடுக்கவைக்கும் முடிவோடு அணி சேர்ந்துள்ளார்கள். அந்த நினைப்பில் தான், கூட்டணி உறுதியானதுமே ‘கூட்டணி ஆட்சி’ என நெருப்பை பற்றவைத்தார் அமித் ஷா.
கூட்டணி ஆட்சி என்ற பாஜக-வின் பேச்சை அதிமுக-வினர் யாரும் ரசிக்கவில்லை. இபிஎஸ் தொடங்கி கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும், “அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்” என அடித்துச் சொல்கிறார்கள். ஆனாலும், பாஜக தனது ‘கூட்டணி ஆட்சி’ முழக்கத்தைக் கைவிடவே இல்லை. சமீபத்தில் மதுரை வந்தபோதும் அமித் ஷா மீண்டும் இதை உறுதிசெய்துவிட்டுப் போயிருக்கிறார்.
தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததே இல்லை. எவ்வளவு பலமான கூட்டணியாக இருந்தாலும், ‘கூட்டணி ஆட்சி’ என்ற முழக்கத்துடன் காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகள் தேர்தலை சந்தித்ததில்லை. 2006-ல், 96 இடங்களில் மட்டுமே வென்ற திமுக, தனது கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங் (34), பாமக (18), சிபிஎம் (9), சிபிஐ (6) கட்சிகளின் ஆதரவுடன் 5 வருடமும் நிலையான ஆட்சியை தந்தது. இப்படி நெருக்கடியான நேரங்களில் கூட ‘கூட்டணி ஆட்சி’ முடிவை திமுக-வும், அதிமுக-வும் எடுத்ததில்லை.
பாஜக-வின் ‘கூட்டணி ஆட்சி’ எனும் தூண்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தலாம். ஏனென்றால் ‘ஆட்சியில் பங்கு’ கனவோடு இருக்கும் பாமக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர இது உதவும். ஆச்சரியமாக கூட்டணி ஆட்சி ஃபார்முலாவுடன் தவெக கூட அதிமுக அணிக்குள் வரவும் வாய்ப்புள்ளது. ஆனால், இந்த ‘கூட்டணி ஆட்சி’ முழக்கம் அதிமுக-வை அமைப்பு ரீதியாக பலவீனப்படுத்தும் என அஞ்சுகிறார்கள் அக்கட்சியின் மூத்த தலைவர்கள்.
“கூட்டணி ஆட்சி எனும் முழக்கம் ஒட்டுமொத்தமாக அதிமுக – பாஜக அணிக்கே கூட பங்கம் விளைவிக்கலாம். தமிழகம் இதுவரை அதிமுக, திமுக கட்சிகளின் தனித்த ஆட்சியையே கண்டுள்ளது. எனவே, ‘கூட்டணி ஆட்சி’ என்ற பேச்சால் அதிமுக அணி மீது மக்கள் நம்பிக்கை இழந்து மீண்டும் திமுக-வுக்கே வாக்களிக்கலாம். மக்களிடம் திமுக அரசுக்கு எதிராக அதிருப்திகளும் இருப்பது போல் மத்திய பாஜக அரசுக்கு எதிரான மனநிலையும் உள்ளது.
எனவே, மாற்றத்தை விரும்பி அதிமுக-வுக்கு வாக்களிக்க நினைக்கும் மக்களுக்கு பாஜக-வின் ‘கூட்டணி ஆட்சி’ முழக்கம் அதிருப்தியை உண்டாக்கலாம். இப்போதே பாஜக-வின் ‘வாய்ஸ்’ அதிகமானால், அதிமுக-வால் தனித்தன்மையுடன் செயல்பட முடியாது என கருதி மக்கள் திசைமாறவும் வாய்ப்புள்ளது” என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
“அதிமுக தலைமையில் தனித்து ஆட்சி என்பதே தமிழக மக்களின் நம்பிக்கையை பெற உதவும். கூட்டணி ஆட்சி என்று பேச ஆரம்பித்தால், மக்கள் நம்மை நம்பமாட்டார்கள். இதனை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே திமுக-வை வீழ்த்த முடியும். இல்லையெனில் அதிமுக – பாஜக அணி மீண்டும் திமுக வெற்றிக்கே உதவும்” என்கின்றனர் அதிமுக சீனியர்கள்.
2024-ல் நடந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில், தெலுங்கு தேசம் தனிப்பெரும்பான்மை பெற்றாலும், ஜனசேனா மற்றும் பாஜக-வுக்கு அமைச்சரவையில் இடமளித்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. அதே ஃபார்முலாவில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைக்கலாம் என கணக்குப் போடுகிறது பாஜக. ஆனால், ஆந்திர மாடல் இங்கு எடுபடுமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT