Published : 09 Jul 2025 05:43 AM
Last Updated : 09 Jul 2025 05:43 AM
கடலூர்: கடலூர் அருகே பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். கடலூரில் உள்ள தனியார் பள்ளி வேன் நேற்று காலை தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) வேனை ஓட்டிச் சென்றார்.
காலை 7.30 மணி அளவில் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்ற வேன் மீது, விழுப்புரம்-மயிலாடு துறை பயணிகள் ரயில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேன் சுக்குநூறாக நொறுங்கி, 50 அடி வரை இழுத்துச் செல்லப்பட்டது.
இந்த விபத்தில் தொண்டமாநத்தம் விஜயசந்திரகுமார் மகன் நிமிலேஷ் (12), சின்னகாட்டுசாகை திராவிடமணி மகள் சாருமதி(16) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சாருமதியின் தம்பி செழியன்( 15), நிமிலேஷின் அண்ணன் விஷ்வேஸ் ( 16), வேன் ஓட்டுநர் சங்கர் (47) மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்ற ஓடிச் சென்று, மின்சாரம் பாய்ந்ததில் பாதிக்கப்பட்ட செம்மங்குப்பம் அண்ணாதுரை (47) ஆகியோரை அங்கிருந்தவர்கள்மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சாருமதி, நிமிலேஷ் உடல்களை போலீஸார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தகவலறிந்து அரசு மருத்துவமனையில் பள்ளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குவிந்து கதறி அழுதனர். இதற்கிடையே, மேல்சிகிக்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட செழியன், அங்கு உயிரிழந்தார். விபத்து காரணமாக விழுப்புரம் மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஆலபாக்கத்தில் 4 மணி நேரம் நிறுத்தப்பட்டது.
அந்த மார்க்கத்தில் செல்லும் திருச்சி - தாம்பரம் வாராந்திர ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. சேதமடைந்தமின் பாதை மற்றும் ரயில் பாதைகள் சரி செய்யப்பட்ட பின்னர், அந்த தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் சி.வெ. கணேசன் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், உயிரிழந்த மாணவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ரூ.5 லட்சம் நிவாரணம்: விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாராணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கேட் கீப்பர் கைது: அப்பகுதி மக்கள் கூறும்போது, “ரயிவேல் கேட் மூடாமல் இருந்ததால் விபத்து நேரிட்டது. கேட் கீப்பர் சரியான நேரத்தில் கேட்டை மூடியிருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம். இந்த ரயிலுக்கு முன்பு செல்லும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோதும் ரயில்வே கேட் திறந்திருந்தது” என்றனர். இதற்கிடையே, கேட் கீப்பரான உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பங்கத் சர்மாவை (32) பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டது. பின்னர் அவரை போலீஸார் கைது செய்தனர்.
தெற்கு ரயில்வே விளக்கம்: தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “முதல்கட்ட விசாரணையில், வேன் வந்தபோது கேட் மூடப்பட்டிருந்ததும், வேன் ஓட்டுநர் வலியுறுத்தியதால் கேட் கீப்பர் ரயில்வே கேட்டை திறந்ததும் தெரியவந்துள்ளது. அவரைப் பணியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. லெவல் கிராசிங் பகுதியில் முழு ரயில்வே நிதியுதவியுடன் சுரங்கப் பாதை அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த ஓராண்டாக மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கவில்லை. இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம், பலத்த காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2.5 லட்சம், மற்றவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆளுநர், துணை முதல்வர், தலைவர்கள் இரங்கல்: மாணவர்கள் உயிரிழப்புக்கு ஆளுநர், துணை முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் அப்பாவிக் குழந்தைகள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. அவர்களது குடும்பங்களுக்கு நெஞ்சார்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: பள்ளிக் குழந்தைகளின் உயிரிழப்பு வேதனையைத் தருகிறது. விபத்தில் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கல்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சி தருகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: ஈடுகட்ட முடியாத இந்த பேரிழப்பில் இருந்து மீண்டுவர, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இறைவன் துணை நிற்கட்டும்.
இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி, திக தலைவர் கி.வீரமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT