Published : 09 Jul 2025 04:56 AM
Last Updated : 09 Jul 2025 04:56 AM
சென்னை: ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டம் சட்ட விதிகளுக்கும், சட்டத்துக்கும் முரணானது என்று அன்புமணி தலைமையில் நடந்த பாமக அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை அடுத்த பனையூரில் அன்புமணி தலைமையில் அரசியல் தலைமைக் குழு கூட்டம் நேற்று நடந்தது.
கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: பாமக அடிப்படையில் ஜனநாயக அமைப்பு ஆகும். பாமக நிறுவனரான ராமதாஸை கட்சி எப்போதும் கொண்டாடுகிறது. போற்றி வணங்குகிறது. அதேநேரத்தில் கட்சியை வழிநடத்தி செல்வது பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைவரின் பணியாகும்.
கட்சியின் தலைவர் அன்புமணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் பங்கேற்காமல் அரசியல் தலைமைக்குழு, செயற்குழு, பொதுக்குழு என்கிற பெயர்களில் நடைபெறும் கூட்டங்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளுக்கும், சட்டத்துக்கும் முரணானவை ஆகும். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட அன்புமணி தலைமை மீது இந்த கூட்டம் நம்பிக்கை தெரிவிக்கிறது. அன்புமணியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போம் என்று கூட்டம் உறுதி ஏற்கிறது.
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசை கண்டித்து அன்புமணி தலைமையில் வரும் 20-ம் தேதி போராட்டம் நடத்தப்படும். அன்புமணி மேற்கொள்ளவிருக்கும் 100 நாள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை வெற்றி பெற உழைப்போம்.
பெண்களும், குழந்தைகளும் வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறும் தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்ற, அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்து விட்ட திமுக அரசை அகற்ற பாமக உறுதியேற்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT