Published : 09 Jul 2025 12:19 AM
Last Updated : 09 Jul 2025 12:19 AM

அரசியல்வாதிகளின் பேச்சுகளை வேடிக்கை பார்க்க முடியாது: பொன்முடி வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி கடும் எச்சரிக்கை

சென்னை: கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக அரசியல்வாதிகளின் எல்லையற்ற பேச்சுகளை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு காரணமாக, அவர் தனது அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது.இதையடுத்து, பொன்முடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து, அதை விசாரிக்குமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார். அதன்படி, இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, "பிஎன்எஸ் சட்டத்தின்படி ஒருவருக்கு எதிராக அளிக்கப்படும் புகார்கள் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தும் போலீஸார், அதில் வழக்குப் பதிய முகாந்திரம் இல்லை எனத் தெரியவந்தால், போலீஸாரே அந்தப் புகாரை முடித்து வைக்கலாம். அதன்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட 124 புகார்களும் முடித்து வைக்கப்பட்டுவிட்டது. சம்பந்தப்பட்ட புகார்தாரர்கள் இதை எதிர்த்து காவல் துறை உயர் அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம்" என்றார்.

அதற்கு நீதிபதி பி.வேல்முருகன், ‘‘பொன்முடிக்கு எதிராக புகார் கொடுத்த அனைத்து புகார்தாரர்களிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதா?’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "புகார்தாரர்களிடம் வாக்குமூலங்கள் பெற்று அதன் அடிப்படையிலேயே புகார்கள் முடித்து வைக்கப்பட்டன" என்றார்.

அதையடுத்து நீதிபதி, "புகார்தாரர்கள் வேண்டுமென்றால் போலீஸ் உயரதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்யட்டும். பொன்முடிக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த இந்த வழக்கு நிலுவையில் இருக்கட்டும்" என்றார், பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசியல்வாதிகள் பொது இடங்களில் பேசும்போது, யோசித்து நிதானத்துடன் பேச வேண்டும். இதுபோல வரம்பு மீறி பேசும் நபர்களின் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்த நீதிமன்றம் விரும்புகிறது.

மனுதாரர் மட்டுமல்ல, அனைத்து அரசியல்வாதிகளுமே கருத்து சுதந்திரம் என்ற பெயரில், `வானமே தங்களது எல்லை' என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர். அவர்களின் இதுபோன்ற அத்துமீறிய பேச்சுகளை எல்லாம் நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அரசியல்வாதிகள் நமது அரசியல் சாசனத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும். 140 கோடி பேர் வசிக்கும் நாட்டில் நாமும் வசிக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு, அரசியல்வாதிகள் செயல்பட வேண்டும். ராஜா என்ற நினைப்புடன் செயல்படக் கூடாது. நாடு அனைவருக்கும் பொதுவானது.

போலீஸார் நடத்தும் முதல்கட்ட விசாரணை என்பது, குறிப்பிட்ட சம்பவம் நடந்ததா, இல்லையா என்பது குறித்து விசாரிப்பதற்கு மட்டும்தான். அதன்பிறகு வழக்குப் பதிவு செய்வது மட்டும்தான் போலீஸாரின் வேலை. அந்த வழக்கின் முடிவை நீதிமன்றம் தீர்மானிக்கும். உங்களுக்கு வேண்டாதவர்கள் என்றால் வழக்குப் பதிய முகாந்திரம் உள்ளது என்றும், வேண்டியவர்கள் என்றால் வழக்குப் பதிய முகாந்திரம் இல்லை என்று கூறுவதும் அரசு தரப்புக்கு வாடிக்கையாகிவிட்டது.

முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் புலன் விசாரணை அதிகாரி தீர்ப்பு எழுத முடியாது. மைக் முன்பாக பேசும் ஒவ்வொருவரும், தங்களை இந்த நாட்டின் மன்னர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். பொன்முடியின் இந்த பேச்சுக்காக அவர் மீது புகார் கொடுத்த 124 பேருக்கும் முறையாக நோட்டீஸ் கொடுத்து அவர்களின் விளக்கம் பெற்று, அதில் முகாந்திரம் இல்லை எனக்கருதினால் அதன் பிறகு தான் புகார்களை போலீஸார் முடித்து வைக்க முடியும். குறிப்பாக பொன்முடிக்கு எதிரான புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தீவிரமாக கருதப்படும்.

பொன்முடி மீதான அனைத்து புகார்களையும் ஒட்டுமொத்தமாக முடித்து வைக்க என்ன காரணம்? இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அதற்குள் பொன்முடிக்கு எதிராக புகார் அளித்தவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து, அவர்களிடம் விளக்கம் பெற்று, அதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அரசு தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x