Last Updated : 08 Jul, 2025 08:44 PM

3  

Published : 08 Jul 2025 08:44 PM
Last Updated : 08 Jul 2025 08:44 PM

“கோவை தொழில் வளர்ச்சி, விமான நிலைய விரிவாக்கத்துக்கு உறுதுணை!” - பழனிசாமி வாக்குறுதி

கோவை பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஓட்டல் வளாகத்தில் தொழில்துறையினர், விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோருடன் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று கலந்துரையாடினார். படம்: ஜெ.மனோகரன்.

கோவை: மின்கட்டணம் குறைப்பு, மூலப்பொருட்கள் பிரச்சினைக்கு தீர்வு என கோவை தொழில் வளர்ச்சி மற்றும் விமான நிலைய விரிவாக்க திட்ட பணிகளை துரிதப்படுத்த அதிமுக ஆட்சி அமைந்த பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தை மேட்டுப்பாளையத்தில் திங்கட்கிழமை தொடங்கிய நிலையில், இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் இன்று அவர் கலந்து கொண்டார். கோவை பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஓட்டல் வளாகத்தில் தொழில்துறையினர், விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோருடன் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசும்போது, “கோவை மாவட்டத்திற்கு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை, ஐந்து ஆண்டுகளில் முதல்வராக இருந்துபோது பழனிசாமி வழங்கினார். கோவைக்கு அத்திக்கடவு - அவிநாசி திட்டம், ஏர்போர்ட் விரிவாக்கம், மெட்ரோ ரயில் அறிவிப்பு வெளியிட்டு ரூ.3 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தார். அதிகமான பாலங்கள், சாலைகள், கூட்டுக் குடிநீர் திட்டம் அரசு மருத்துவமனை மேம்பாடு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

கோவை ராசியான மாவட்டம் என்பதால், ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தை இங்கு தொடங்கியுள்ளோம். கடந்த 2010-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பிரச்சாரத்தை கோவையில் தொடங்கினார். கோட்டைக்கு சென்றார். அதே போல் பழனிசாமி அவர்களும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். 2026-ம் ஆண்டு தேர்தலில் நிச்சயம் வென்று கோட்டையை பிடிப்போம்” என்றார்.

தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பு மற்றும் அடுக்குமாடி குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் நிர்வாகி ஜெயபால் பேசும்போது, “மத்திய அரசு தரக்கட்டுப்பாடு என்ற பெயரில் புதிய சட்டத்தை கொண்டு வந்ததால் பாலியஸ்டர், விஸ்கோஸ் போன்ற செயற்கை இழை மூலப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக, மின் கட்டண உயர்வால் தொழில்துறையினர் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் பலவித வரி செலுத்த வேண்டியுள்ளது. ஒரு குடியிருப்பில் 10 வீடுகள் இருந்தால் 5 குடிநீர் இணைப்புகள் மட்டுமே வழங்கப்படுகிறது” என்று பேசினார்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டாக்ட்) பொதுச்செயலாளர் பிரதாப் சேகர் பேசும்போது, “மின்கட்டண உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல கட்ட போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. கோவை மாவட்டத்திறகு என குறுந்தொழில்பேட்டை அமைக்க வேண்டும். நீண்ட கால கோரிக்கையை 2026-ல் வெற்றி பெற்று பொறுப்பேற்ற பின் இத்திட்டத்திற்கு முதல் கையெழுத்து போட வேண்டும்” என்றார்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியது: “இந்தியாவிலேயே அதிக குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. அதன் காரணமாகவே அதிமுக ஆட்சி இருக்கும் வரை அந்த தொழிலுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. கரோனா போன்ற நெருக்கடி சூழல் ஏற்பட்ட போதும் கூட உதவிகள் செய்து தரப்பட்டன. இன்றைய ஆட்சியில் மின்கட்டணம், மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தொழில்துறையினர் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்துவோம்.

மத்திய அரசுடன் இணைந்து ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வோம். ஜவுளித்தொழிலில் மூலப்பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து பயன்படுத்துகிறோம். நானும் விவசாயி என்பதால் பருத்தி சாகுபடியில் உள்ள பிரச்சினைகள் குறித்து நன்கு தெரியும். நவீன தொழில்நுட்பத்துடன் விளைச்சல் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டோம். அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. விவசாயிகள் நலன் காப்பதில் அதிக கவனம் செலுத்தினோம். தேசிய விருது தொடர்ந்து ஐந்தாண்டுகள் பெற்றோம். நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டன.

கோவை தொழில் வளர்ச்சி, விமான நிலைய விரிவாக்க திட்டம் உள்ளிட்டவற்றுக்கு நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின் தேவையான உதவிகள் செய்து தரப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிக முக்கியத்துவம் வழங்கினார். தற்போது உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்” என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x