Published : 08 Jul 2025 06:01 PM
Last Updated : 08 Jul 2025 06:01 PM

கூட்டணியை தேர்வு செய்ய ராமதாஸுக்கு அதிகாரம், அன்புமணிக்கு கண்டனம்: பாமக செயற்குழுவில் தீர்மானம்

படங்கள்: இரா.தினேஷ்குமார்

திண்டிவனம்: 2026 சட்டப்பேரவைத் தேர்தல், 2029 மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களை கொடுக்கும் நல்ல கூட்டணியை தேர்வு செய்யும் அதிகாரத்தை நிறுவனர் ராமதாஸுக்கு அளிப்பது, ராமதாஸுக்கும், கட்சிக்கும் களங்கத்தை ஏற்படும் செயல் தலைவரின் (அன்புமணி) செயலை வன்மையாக கண்டித்து, அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்து விசாரிக்கும் அதிகாரத்தை ராமதாஸுக்கு வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்களை பாமக செயற்குழு நிறைவேற்றியுள்ளது.

தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் நீடித்து வரும் பரபரப்பான சூழ்நிலையில், பாமக மாநில செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் அன்பழகன் வரவேற்றார். மாநில மகளிர் சங்க செயலாளர் வழக்கறிஞர் சுஜாதா தொடங்கி வைத்தார். செயற்குழுக் கூட்டத்தை செயல் தலைவர் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்தனர்.

இந்தக் கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, “96 ஆயிரம் கிராமங்கள், நகரங்கள், பேரூர்களுக்கு சென்று வன்னியர் சங்கத்தையும், பாமகவையும் வளர்த்துள்ளேன். என் வலியை தெரிந்த, அறிந்தவர்கள் கூட்டத்துக்கு வந்துள்ளனர். இன்னும் வராமல், வீட்டில் இருந்து பார்க்கும் 95 சதவீத மக்களுக்கும் என் வலி தெரியும்.

2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துதான் போட்டியிட முடிவு செய்துள்ளோம். கூட்டணி அமைப்பது தொடர்பான அதிகாரத்தை, செயற்குழுவில் ஏகமனதாக வழங்கி உள்ளீர்கள். ஏற்கெனவே நிர்வாகக் குழுவும், அதிகாரத்தை கொடுத்துள்ளது. நமக்கு கிடைக்கக்கூடிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்க உள்ளோம். வெற்றி வாய்ப்பு உள்ள அனைவரும் விருப்ப மனு கொடுத்து ஆயத்தமாகலாம். உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் வழங்கப்படும் ‘ஏ’, ‘பி’ படிவங்களில் நான்தான் கையொப்பமிடுவேன். பாமக, சங்கம் தொடங்கிய காலத்தில் இருந்து என்னுடன் பயணித்து, துன்பங்களையும், துயரங்களையும் தாங்கி, சிறைக் கொடுமைகளை அனுபவித்து வந்த 99 சதவீதம் பேர், பாசத்துடன் உள்ளனர். என் வலி அவர்களுக்கு தெரியும்.

அரசியல் தீர்மானத்தின் மூலம் பல்வேறு சந்தேகங்கள் உங்களுக்கு தீர்ந்திருக்கும். சந்தேகப்பட்டவர்களுக்கு இது மருந்து. இங்கே வந்தவர்களுக்கு விருந்து. பாட்டாளி சொந்தங்களை நினைத்து வாழ்கிறேன். சமுதாய மக்கள் முன்னேற்றம் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றத்துக்காக பாடுபடுகிறேன். பூம்புகாரில் ஆகஸ்ட் 10​-ம் தேதி நடைபெறும் மகளிர் மாநாட்டில் 2 லட்சம் மகளிர் பங்கேற்க வேண்டும். 8 ஆண்டுகளுக்கு பிறகு மகளிர் மாநாட்டில் கூடுகிறோம்” என்றார்.

அன்புமணியை கண்டித்து தீர்மானம்: பாமக செயற்குழுக் கூட்டத்தில், ‘2026 சட்டப்பேரவைத் தேர்தல், 2029 மக்களவை தேர்தலில் அதிக இடங்களை கொடுக்கும் நல்ல கூட்டணியை தேர்வு செய்யும் அதிகாரத்தை நிறுவனர் ராமதாஸுக்கு அளிப்பது, தலைமை உத்தரவுக்கு கட்டுப்படாமல் கட்சியை பலவீனப்படுத்தும் நபர்கள் மீது கட்சி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது’ என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், ‘பொது வெளியில் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸுக்கும், கட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் செயல் தலைவரின் (அன்புமணி) செயலை வன்மையாக கண்டித்து, அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்து விசாரிக்கும் அதிகாரத்தை ராமதாஸுக்கு வழங்குவது, விளை பொருட்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை இரட்டிப்பாக வழங்கி விவசாயிகள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பேராசிரியர் தீரன், மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர், பாட்டாளி தொழிற்சங்க பேரவை பொதுச் செயலாளர் முத்துகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அன்புமணியின் பெயரை தவிர்த்த ராமதாஸ் ஆதரவாளர்கள்: ‘பாமக தலைமையில் அதிகாரம் யாருக்கு?’ என்ற போட்டி நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் கடந்த 6 மாதங்களாக மோதல் நீடிக்கிறது. செய்தியார்கள் சந்திப்பில் மகன் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தந்தை ராமதாஸ் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். அய்யாதான் எங்கள் குலசாமி என்று கூறி வந்த அன்புமணி, கடந்த 10 நாட்களுக்கு முன்பு வயதானதால் அய்யா குழந்தையாக மாறிவிட்டார் என்று பதிலடி கொடுத்தார். இதனால் இருவருக்கும் இடையேயான விரிசல் அதிகரித்துள்ளது.

இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், பாமக மாநில செயற்குழுக் கூட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை தலைவர் அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்தனர். இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றிருந்தாலும், ராமதாஸ் தரப்பு எதிர்வினையாற்றியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அய்யா வழியில் பயணிப்போம் என கூறி வரும் அன்புமணியின் புகைப்படம், செயற்குழு கூட்ட மேடை விளம்பரத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் மற்றும் கட்சியின் சின்னமான மாம்பழம் மட்டும் இடம்பெற்றிருந்தது. மேலும், கூட்டத்தில் பேசிய அனைத்து முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோரும் அன்புமணியின் பெயரை குறிப்பிடாமல் புறக்கணித்தனர்.

அன்புமணியுடன் விவாதம் நடத்த தயாரா என ஒவ்வொரு மேடையிலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த ராமதாஸும், ஒவ்வொரு நொடியும் எங்கள் சின்ன அய்யா என்று முழக்கமிட்டு வந்த கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளும், மறந்தும் கூட அன்புமணியின் பெயரை குறிப்பிடாமல் கட்டுப்பாடுடன் தங்களை உரையை நிறைவு செய்தனர். இதேபோல் கூட்டத்தில் பேசியவர்களில் பெரும்பாலானவர்கள், ‘அன்புமணி’க்கு எதிரான கருத்தை பதிவு செய்திருந்தனர்.

அப்போது பேசியவர்கள், “அம்மா, அப்பாதான் தெய்வம். அவர்களை மீறி செயல்பட்டால் ஒரு பலனும் இல்லை. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. ராமதாஸ் எதைத் தொட்டாலும் பொன்னாக மாறும். இது சிலருக்கு தெரியவில்லை. சமூக ஊடகங்களில் விமர்சிக்கின்றனர். பதிலடி கொடுக்கவும் தெரியும். தந்தை பேச்சை கேட்காமல் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்வது தேவையற்றது. கறுப்பு சட்டை அணிந்து கிருஷ்ணகிரியில் எதிர்ப்போம். ரத்த வாரிசை விட, லட்சிய வாரிசுதான் ராமதாஸுக்கு முக்கியம். அவருக்கு துரோகம் செய்தவர்களுக்கு சாப்பிட சோறு கிடைக்காது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x