Published : 08 Jul 2025 03:50 PM
Last Updated : 08 Jul 2025 03:50 PM
கடலூர்: கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், கேட் கீப்பர் செயலைச் சுட்டிக்காட்டி விதிகள் மற்றும் நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, ‘இந்த லெவல் கிராசிங் கேட்டில் ரயில்வே நிதியுடன் சுரங்கப்பாதை அமைக்க ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஓர் ஆண்டாக மாவட்ட ஆட்சியர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை’ என்று குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு 4 மாணவர்களுடன் சென்ற பள்ளி வாகனம் கடலூர் - ஆலப்பாக்கம் ரயில் நிலையம் இடையே 170 எண் கொண்ட ரயில்வே லெவல் கிராசிங் கேட் கடக்க முயன்றபோது, ஒரு துரதிருஷ்டவசமான விபத்து ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் - மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில், லெவல் கிராசிங் கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். ஒரு மாணவர், ஓட்டுநர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்தச் சம்பவ இடத்துக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உள்பட அதிகாரிகள் விரைந்து சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், வேன் வந்தபோது கேட் மூடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இருப்பினும் பள்ளியை அடைவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க வேன் கேட்டைக் கடக்க அனுமதிக்குமாறு வேன் ஓட்டுநர் வலியுறுத்தினார். இது கேட் கீப்பரால் தவறாக அனுமதிக்கப்பட்டது. அதாவது, விதிகள் மற்றும் நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது.
விதிகளின்படி, கேட் கீப்பர் கேட்டைத் திறந்திருக்க முடியாது. எனவே, கேட் கீப்பர் இடைநீக்கம் செய்யப்பட்டு, அவரைப் பணியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், இந்தக் குற்றவியல் அலட்சியத்துக்காக அவர் மீது வழக்குப் பதிந்து, கேட் கீப்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த லெவல் கிராசிங் கேட்டில் தெற்கு ரயில்வேயால் முழு ரயில்வே நிதியுதவியுடன் ஒரு சுரங்கப்பாதைக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஓர் ஆண்டாக மாவட்ட ஆட்சியர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை.
விலை மதிப்பற்ற உயிர்கள் இழப்பு மற்றும் நபர்களுக்கு காயம் ஏற்பட்டதற்கு ரயில்வே ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2.5 லட்சமும், காயமடைந்த மற்றவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் ரயில்வே மூலமாக வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT