Published : 08 Jul 2025 04:05 PM
Last Updated : 08 Jul 2025 04:05 PM
சென்னை: கோயில் கும்பாபிஷேகம் நிகழ்வில் தான் அவமரியாதை செய்யப்பட்டதாக உண்மைக்கு புறம்பான கருத்தை கூறி, செல்வப்பெருந்தகை மலிவான அரசியல் செய்வதாக தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்: "காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, தனக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், தன்னை புறக்கணித்தனர் என்வும் கூறியுள்ளார். மேலும், 2000 ஆண்டுகளாக இந்த புறக்கணிப்பு உள்ளது எனவும் கூறியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த விழாவில் அண்ணாநகர் மற்றும் உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்களும், பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த விழாவிற்கு தாமதமாக சென்ற, செல்வப்பெருந்தகையை அனைவரோடும் மூலவர் விமானத்தின் கலசத்திற்கு அருகே நிற்க வைத்துள்ளனர்.
இருப்பினும், தேவையற்ற அரசியல், மலிவான, உண்மைக்கு புறம்பான தகவலை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பேசியிருப்பது அரசியல் அநாகரிகம் மட்டுமல்ல; உள்நோக்கம் கொண்டதுமாக உள்ளது. மேலும், கும்பாபிஷேகம் முடிந்த மூலவர் அர்ச்சனையின் போது, செல்வப் பெருந்தகைக்காக அனைவரும் காத்திருந்த நிலையில், அவர் அதில் கலந்து கொள்ளாமல் வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.
கும்பாபிஷேகம் யாருக்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. குறித்த நேரத்தில் செல்லாமல், வழக்கம் போல் இன்னொரு அரசியல் நிகழ்ச்சி என்ற எண்ணத்தோடு அங்கே சென்று விட்டு தான் அவமரியாதைக்கு உள்ளானதாக உண்மைக்கு புறம்பான கருத்தை செல்வப் பெருந்தகை கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.” என்று நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT