Published : 08 Jul 2025 02:52 PM
Last Updated : 08 Jul 2025 02:52 PM
சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 18-07-2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
அதுபோது, கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறவுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13, 14-ல் மட்டும் நாடாளுமன்றத்தில் பணிகள் நடைபெறாது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
கூட்டத்தொடரை ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் முடிக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 21 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மாதம் நடைபெறும் இந்த நீண்ட கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ‘
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு, முதல்முறையாக நாடாளுமன்றம் கூடுவதால், அந்த நடவடிக்கை குறித்தும், இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தலையீடு குறித்தும் விவாதம் நடைபெறும் எனத் தெரிகிறது. கூட்டத்தொடர் தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்க திமுக எம்.பி.க்கள் கூட்டம் ஜூலை 18 காலை 10.30 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT