Last Updated : 08 Jul, 2025 03:02 PM

 

Published : 08 Jul 2025 03:02 PM
Last Updated : 08 Jul 2025 03:02 PM

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து: துணை முதல்வர் உதயநிதி இரங்கல்

சென்னை: கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவ - மாணவியர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவ - மாணவியர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இந்த மழலைகளின் மரணம் ஆற்றொணா துயரையும் வேதனையையும் தருகிறது.

இவ்விபத்தில் படுகாயமுற்றவர்களுக்கு முதல்வரின் உத்தரவின் பேரில் உரிய சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.விபத்தில் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது மாதிரியான விபத்துகள் இனியும் தொடராத வகையில் அனைத்து தரப்பிலிருந்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

கடலூர் விபத்து பின்னணி: கடலூர் தனியார் பள்ளி வேன் இன்று (ஜூலை.8) காலை 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. வேனை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் காலை சுமார் 8 மணி அளவில் வேன் கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக பள்ளி வேனில் மோதியது.

மோதிய வேகத்தில் பள்ளி வேன் நசுங்கி கவிழ்ந்தது. இதில் தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த நிமலேஷ் (12), சின்ன காட்டுசாகையை சேர்ந்த சாருமதி (16) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்..

படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன்( 15), தொண்டமாநத்தத்தை சேர்ந்த விஷ்வேஸ் ( 16), வேன் ஓட்டுநர் சங்கர்(47) ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில், சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன் ( 15) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

விபத்து நடந்த இடத்துக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த விபத்து கடலூர் பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் அந்தந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்! இந்த நிலையில், கேட் கீப்பரின் அலட்சியத்தாலேயே பள்ளி வேன் விபத்து ஏற்பட்டது என்றும், ரயில்வே கேட்டை மூடாமல் கேட்கீப்பர் தூங்கிவிட்டதால் பள்ளி வேன் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றபோது விபத்து நேர்ந்துள்ளது என்றும் பொதுமக்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர்.

செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கேட் கீப்பரான உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மாவை (32) பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பங்கஜ் சர்மாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x