Last Updated : 08 Jul, 2025 11:51 AM

 

Published : 08 Jul 2025 11:51 AM
Last Updated : 08 Jul 2025 11:51 AM

கடலூர் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு: இபிஎஸ் வேதனை

படங்கள்: எம்.சாம்ராஜ்

சென்னை: கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க, உரிய நடவடிக்கை எடுக்க இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன், காயமடைந்த அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

கடலூர் கோர விபத்தின் பின்னணி: கடலூர் தனியார் பள்ளி வேன் இன்று (ஜூலை.8) காலை 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. வேனை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் காலை சுமார் 8 மணி அளவில் வேன் கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக பள்ளி வேனில் மோதியது.

மோதிய வேகத்தில் பள்ளி வேன் நசுங்கி கவிழ்ந்தது. இதில் தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த நிமலேஷ் (12), சின்ன காட்டுசாகையை சேர்ந்த சாருமதி (16) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்..

படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன்( 15), தொண்டமாநத்தத்தை சேர்ந்த விஷ்வேஸ் ( 16), வேன் ஓட்டுநர் சங்கர்(47) ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில், சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன் ( 15) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

விபத்து நடந்த இடத்துக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த விபத்து கடலூர் பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் அந்தந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்! இந்த நிலையில், கேட் கீப்பரின் அலட்சியத்தாலேயே பள்ளி வேன் விபத்து ஏற்பட்டது என்றும், ரயில்வே கேட்டை மூடாமல் கேட்கீப்பர் தூங்கிவிட்டதால் பள்ளி வேன் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றபோது விபத்து நேர்ந்துள்ளது என்றும் பொதுமக்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர்.

செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கேட் கீப்பரான உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மாவை (32) பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பங்கஜ் சர்மாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x