Published : 08 Jul 2025 11:24 AM
Last Updated : 08 Jul 2025 11:24 AM
மேட்டுப்பாளையம்: அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விடுபட்ட பகுதிகளை இணைத்து அத்திக்கடவு - அவிநாசி இரண்டா வது திட்டம் நிறைவேற்றப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் விவசாயிகள், நெசவாளர்கள், செங்கல் உற்பத்தியாளர்களுடன் நேற்று கலந்துரையாடினார். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதய குமார், நத்தம் விஸ்வநாதன், முன்னாள் எம்பி தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, “மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரம் ஏராளமான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஆனால், அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் எங்களுக்கு பாசன வசதி கிடைக்கவில்லை. எனவே, பவானி ஆற்றில் தடுப்பணை கட்டி பாசன வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் மேட்டுப்பாளையம் காரமடை பகுதி விடுபட்டுள்ளது. எனவே, விடுபட்ட பகுதிகளை இரண்டாம் திட்டத்தில் இணைக்க வேண்டும்.
காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள் தொந்தரவு அதிகமாக இருக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்றனர். நெசவாளர்கள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர்கள் பேசும்போது, “பறிக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளும் வழங்கி நெசவுத் தொழிலுக்கு உயிர் கொடுக்க வேண்டும்.
கோவை அருகே உள்ள தடாகம் செங்கல் நகரம் என்று அழைக்கப்படுகிறது. அங்கு செயல்பட்டுவந்த செங்கல் சூளைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நாங்கள் அரசு விதிமுறைக்கு உட்பட்டு மண் எடுத்து செங்கல் சூளையை நடத்த தயாராக உள்ளோம். அதற்கு நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதற்கு பதிலளித்து பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகளில் தூர்வாரப்பட்டது. நானும் ஒரு விவசாயிதான். கால்நடை மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டதும் அதிமுக ஆட்சியில்தான். அமெரிக்கா சென்று ஆய்வு செய்து இங்கு வந்து பசு ஆராய்ச்சி செய்ய மையம் தொடங்கினோம். கலப்பின பசுவை உருவாக்கி, பால் உற்பத்தியை அதிகப்படுத்த முயற்சித்தோம்.
ஆடு, மீன், பன்றி, கோழி வளர்ப்பு எல்லாமே அங்கு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. விவசாயிகளை நேரடியாக அழைத்துச் சென்று பயிற்சி அளிக்க முயற்சித்தோம். ஆட்சி மாற்றத்தில் எல்லாம் கிடப்பில் போடப்பட்டது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் இலவசமாக வழங்கியது, வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தது அதிமுக ஆட்சி. வன விலங்கு களால் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் பாதிப்புகள் தொடர்பாக உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி, அதனை மதிப்பீடு செய்து இழப்பீட்டை உடனடியாக கொடுத்தோம்.
அண்டை மாநிலமான கேரளாவில் பேச்சு வார்த்தை நடத்தி நதிநீர் பிரச்சினை தீர்க்க வழி வகுத்தோம். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை இணைத்து இரண்டாவது திட்டத்தை நிறைவேற்ற அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து, ஆய்வு செய்து திட்ட அறிக்கையைத் தயார் செய்தோம். அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே, மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் விடுபட்ட பகுதிகளை இணைத்து அத்திக்கடவு- அவிநாசி இரண்டாவது திட்டம் நிறைவேற்றப்படும்.
நீர் சுத்திகரிப்பு திட்டத்துக்காக ரூ.11,500 கோடி ஒதுக்கப்பட்டது. 2019-ம் ஆண்டில் நான் முதல்வராக இருந்தபோது பிரதமரை சந்தித்தேன். இந்த திட்டத்தின் செயல்முறை களை ‘நடந்தாய் வாழி காவிரி’ என்ற திட்டத்தை விளக்கி அதற்கான நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதிமுக அரசாங்கம் என்பது மக்களுக்கான அரசாங்கம், விவசாயிகளுக்கான அரசாங்கம். இதில் மாற்றுக் கருத்து இல்லை.
எப்போதும் நாங்கள் விவசாயிகளுடன், மக்களுடன் இருப்போம். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம், சூலூர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, தேக்கம் பட்டியில் உள்ள வனப் பத்ரகாளியம்மன் கோயிலில் பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT