Published : 08 Jul 2025 10:11 AM
Last Updated : 08 Jul 2025 10:11 AM
கடலூர்: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார், காவல் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கடலூர் - செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை (கேட் எண் 170) இன்று காலை மாணவர்களுடன் பள்ளி வாகனம் கடக்க முயன்ற போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி பயணித்த பயணிகள் ரயில் (வண்டி எண் 56813) மோதியது. இந்த விபத்தில் ரயில் மோதியதில் பள்ளி வாகனம் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. விபத்தில் சிக்கிய பள்ளி வாகனத்தில் 4 மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் பயணித்துள்ளனர்.
இதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் சம்பவம் இடத்தில் பார்வையிட்ட போது உறுதி செய்துள்ளார். காயமடைந்த மற்ற இரண்டு மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்.
இந்நிலையில், இந்த விபத்துக்கு காரணம் கேட் கீப்பரின் அலட்சியம் தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு அறுந்து விழுந்த மின் கம்பிகளை ரயில்வே ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர். ரயில் பாதையில் இருந்து விபத்தில் சிக்கிய வாகனம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT