Published : 08 Jul 2025 05:37 AM
Last Updated : 08 Jul 2025 05:37 AM
சென்னை: ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 15 பேர் மத்திய வெளியுறவுத் துறையின் முயற்சியால் மீட்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை வரவேற்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அனைத்து செலவுகளையும் தமிழக பாஜக ஏற்றுள்ளதாக தெரிவித்தார். ஈரானில் சிக்கித் தவித்த தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் உவரியை சேர்ந்த 15 மீனவர்கள், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலம் மீட்கப்பட்டனர்.
ஈரானிலிருந்து கப்பலில் துபாய் வந்த அவர்கள், அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கும் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று முன்தினம்சென்னைக்கும் வந்தனர். சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீனவர்களை வரவேற்றார். பின்னர் பாஜக ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம், திருநெல்வேலிமாவட்டம் உவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மீனவர்கள் கூறியதாவது: நாங்கள் மீன்பிடித் தொழிலுக்காக கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு சென்றோம். அங்கு போர்நடந்ததால், எங்களால் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியவில்லை.உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டோம். போரால் எங்களுக்கு நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனால் நாங்கள் தங்கியிருந்த இடம் அருகில் குண்டுகள் வெடிப்பது, எங்கள் தலைக்கு மேலே ஏவுகணைகள் செல்வது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. ஈரான் நாடு முழுவதுமே ஜிபிஎஸ் கருவிகள் வேலை செய்யவில்லை. ஜிபிஎஸ் கருவி இல்லாமல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடியாது. இதனால் நாங்கள் இந்தியாதிரும்ப முடிவு செய்தோம்.
திருநெல்வேலியில் உள்ள எங்கள் குடும்பத்தினர், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மூலம் முயற்சிகளை மேற்கொண்டனர். பின்னர் இந்திய வெளியுறவுத் துறை மூலம் நாங்கள் மீட்கப்பட்டு, ஈரானிலிருந்து கப்பலில் துபாய் வந்தோம். அங்குசில நாட்கள் தங்க வேண்டிய நிலைஏற்பட்டது.
அதன் பிறகு துபாயிலிருந்து விமானத்தில் டெல்லிக்கும், டெல்லியிலிருந்து இப்போது சென்னைக்கும் வந்திருக்கிறோம். எங்களை பத்திரமாக மீட்டு அழைத்து வர உதவிய பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினர்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், “இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் முயற்சியால், இந்த மீனவர்கள் ஈரானில் தங்கியிருந்த தீவுக்கு, இந்திய தூதரக அதிகாரிகள் நேரடியாக சென்று, இவர்களை மீட்டு துபாய்க்கு கப்பலில் அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும் 15 திருநெல்வேலி மாவட்டம் மீனவர்கள் ஈரானில் மற்றொரு தீவில் இருக்கின்றனர். அவர்களையும் மீட்டு அழைத்து வருவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்த ஓரிரு தினங்களில் அவர்களும் இந்தியா திரும்புவார்கள். இதற்கான அனைத்து செலவுகளையும் தமிழக பாஜக ஏற்றுக்கொண்டுள்ளது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT